பக்கம்:மணி பல்லவம் 4.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

647

போய்விட்டார்களடி வசந்தமாலை! இந்த மாளிகைக்கு உள்ளேதான் இப்படி என்றால் வெளியிலாவது என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பவர்கள் உண்டோ? அதுவும் இல்லை, நான் எதற்காக இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று எனக்கே விளங்கவில்லை தோழி! இந்த மாளிகை, இதிலிருக்கிறவர்கள் எனக்குத் தருகிற புறக்ககணிப்பு எல்லாவற்றையும் நான் இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருக்கிற ஒருவர் என்னைப் பற்றியும் சிறிது நினைக்கிறார் என்று நான் அறிய நேரும்போது இந்த உலகத்திலேயே நம்பிக்கை நிறைந்தவளாக நீ என்னைக் காணலாமடீ வசந்தமாலை! நாம் வாழ்வதற்கு என்று தனியாக நமக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். அல்லது நம்முடைய வாழ்க்கையைக் கவனத்தோடு நோக்கிக் கொண்டிருப்பதற்குத் தனியாக ஒரு மனிதர் வேண்டும். இரண்டுமே இல்லாவிட்டால் உயிர் வாழ்வதில் பயன் என்ன? ஒன்றின் மறதி என்பது மற்றொன்றின் ஆழமான நினைவுதான்! மறப்பதற்கும் முடியாமல், நினைப்பதற்கும் பயனின்றி இப்போது நான் எப்படியோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....”

“உங்கள் வேதனை எனக்குப் புரிகிறது, அம்மா! ஆனால், நான் என்ன செய்ய முடியுமென்றுதான் எனக்கும் தெரியவில்லை. உங்கள் தோழிக்கு உங்களிடம் நிறைந்த அனுதாபம் இருந்தும் அவள் வாயில்லாப் பூச்சியாயிருக்கிறாள் என்பதை நீங்களே அறிவீர்கள்...”

“நீ என்ன செய்வாய்? என்னைப் போலவே நீயும் சிறைப்பட்டிருக்கிறாய்! உனக்கு என் மேல் கனிவும், அநுதாபமும் இருப்பதே நீ எனக்கு இதயபூர்வமாகச் செய்யும் உதவிதான். அந்த அனுதாபத்தைக்கூட என் தாயும் சகோதரியும் எனக்கு அளிக்க முடியவில்லை போலிருக்கிறது, வசந்தமாலை! நீ எனக்கு அளித்துக் கொண்டு வருகிற பொருள் விலை மதிப்புக்கு அப்பாற் பட்ட பெறுமானமுடையது. மனத்தில் ஆழத்திலிருந்து கிடைக்கிற மெய்யான அதுதாபத்துக்கு விலையே யில்லையடீ..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/38&oldid=1231468" இலிருந்து மீள்விக்கப்பட்டது