உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

650

மணிபல்லவம்

தந்தையாரின் ஊன்றுகோலைத் தன்போக்கில் கையிலெடுத்துச் சுழற்றினாள் சுரமஞ்சரி. ஒரு நோக்கமுமில்லாமல் தற்செயலாக அவள் செய்த இந்தச் செயலுக்கு முற்றிலும் எதிர்பாராத விளைவு ஒன்று ஏற்பட்டது. அந்த விளைவும் அதில் அடங்கியிருந்த உண்மையும் சுரமஞ்சரி வசந்தமாலை இருவரையுமே பெரு வியப்பில் ஆழ்த்தியது.

ஒன்றையும் செய்ய வேண்டிய குறிப்பில்லாத போது கைத்தினவாகத் தானே செய்யும் நோக்கமில்லாத காரியமாகத்தான் சுரமஞ்சரி ஊன்றுகோலின் பிடியைப் பற்றிச் சுழற்றினாள். இரத்தினக் கற்கள் பதிக்கப் பெற்றிருந்த அந்த யாளி முகப் பிடியோ மரைமரையாகக் கழன்று ஊன்றுகோலிலிருந்து தனியே பிரிந்து அவள் கைக்கு வந்துவிட்டது. பிடியும் ஊன்றுகோலும் தனித் தனியே கழன்றதற்காக மட்டும் சுரமஞ்சரியோ, வசந்தமாலையோ வியப்படையவில்லை. அவை தனித் தனியே கழன்றபோது அவற்றினிடையே சிறைப்பட்டுக் கிடந்த உண்மை ஒன்றும் கழன்று, வெளியேறித் தனிே தரையில் வீழ்ந்தது.

யாளி முகப்பிடி தனியே கழன்றபின் நீண்ட குழல் போலிருந்த ஊன்றுகோலின் உள்ளேயிருந்த சங்கு, சக்கரம், வில், வாள், கதை ஆகிய ஆயுதங்களைப்போல் சிறுசிறு பொன் வடிவங்களால் கோவை செய்யப்பட்ட ஆரம் ஒன்று வெளிவந்து கீழே விழுந்தது.

“இது ஐம்படைத்தாலி என்னும் ஆரம் அம்மா!” என்று சொல்லிக்கொண்டே கீழே குனிந்து அந்த ஆரத்தை எடுத்துத் தலைவியிடம் நீட்டினாள் வசந்தமாலை.

“சிறு குழந்தைகளுக்குக் காப்பிடும் போதல்லவா இதையும் அணிவார்கள்? இதை எதற்காக இந்த ஊன்று கோலுக்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்?” என்று கேட்டுக்கொண்டே அதை வாங்கி வியப்புடன் பார்க்கலானாள் சுரமஞ்சரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/41&oldid=1231471" இலிருந்து மீள்விக்கப்பட்டது