652
மணிபல்லவம்
வதற்காக அந்தக் கப்பலின் தலைவனாகிய சீனனோடு அவர் பேச்சுக் கொடுத்தார். அதில் சிறிது நேரம் கடந்தது.
மருள் மாலை நேரம் முதிர்ந்து மெல்ல மெல்லப் போது இருட்டியது. கடற்கரையிலும், துறைமுகத்திலும் தீபங்கள் தென்பட்டன. கலங்கரை விளக்குகளின் உச்சியில் நெருப்பு மூட்டினார்கள். கடலுக்குள் சென்றிருக்கும் பரதவர்கள் திரும்பி வருவதற்கு அடையாளம் போல் கரையோரத்துப் பெருவீடுகளின் மாடங்களில் விளக்கு வரிசைகள் தோன்றின. பல்வேறு திசைகளின் நாடுகளிலிருந்து நீண்ட நாட்கள் கடற் பிரயாணம் செய்து கரையடைந்திருந்த கப்பற்காரர்களின் களியாட்டங்கள் தொடங்கி வளரும் நேரமாதலால் அப்போது பூம்புகார்த் துறைமுகம் இரவில் கொலுவிருக்கும் பேரரசிபோல் பொலியத் தொடங்கியிருந்தது. கப்பல்களின் தளங்களில் இருந்து இனிய இசைக் கருவிகள் ஒலித்தன. களிப்பில் மூழ்குவோர் கூவும் ஆரவாரக் குரல்கள் துறைமுகப் பரப்பின் எங்கும் எதிரொலித்தன. நடன நங்கையர்கள் ஆடும் நளின பாதசரங்களின் இனிய ஒலிகள் எங்கும் கிளர்ந்தன. துறைமுகத்தின் எதிரே கடற்பரப்பில் தொலைவிலிருந்து வரும் ஒளிப் புள்ளிகளை இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ என்று எண்ணி எண்ணி அநுமானம் செய்தபின் அவை ஒன்றுமே அதுவாக இல்லாததை அறிந்து ஏமாந்து கொண்டிருந்த பெருநிதிச் செல்வர் இறுதியில், சீனத்துக் கப்பல் தலைவனிடமிருந்து ஒருவாறு விடை பெற்றுக் கொண்டு பெரு மாளிகைக்குப் புறப்பட்டு விட்டார். மணிபல்லவத்துக் கப்பலைத் துரத்திக் கொண்டு போன நகைவேழம்பர் திரும்பி வந்தால் அவரிடம் தான் பெருமாளிகைக்குப் போய் விட்டதாகக் கூறி அவரையும் அங்கு அனுப்புமாறு சொல்லி ஏற்பாடு செய்துவிட்டுத் தாம் மட்டும் தனியாகவே திரும்பினார் பெருநிதிச் செல்வர்.