பக்கம்:மணி பல்லவம் 4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

653


“இந்த அரைக் குருடனுக்காக இவ்வளவு நேரம் காத்திருந்ததே அதிகம். கப்பலில் வந்த களைப்புத் தாங்க முடியவில்லை. பெருமாளிகைக்குப் போய் உடலுக்கு இதமாகக் காய்ச்சிய தைலத்தைப் பூசிக் கொண்டு வெந்நீரில் ஆடவேண்டும். யாராவது ஒரு முரட்டு யவனப் பணியாளனைத் தைலம் தேய்த்துவிடச் சொன்னால் பயணம் செய்துவிட்டு சோர்வோடு வந்த உடலுக்குப் பரம சுகமாயிருக்கும். வெவெதுப்பாக அவி சுழலும் வெந்நீரில் குளித்துவிட்டு வயிறார உணவும் முடித்தால் இந்த உலகத்தையே விலையாகக் கொடுக்கலாம் போல் அவ்வளவு நல்ல உறக்கம் இரவில் வந்து கொஞ்சும். நன்றாக உறங்கிவிட்டு நாளைக்குப் பொழுது விடிந்ததும் மற்றவற்றைக் கவனிக்கலாம்! நகைவேழம்பர் திரும்பி வந்தாரா, வரவில்லையா என்பதைப் பற்றிக்கூட இனிமேல் நாளைக்குப் பொழுது விடிந்து கண் விழித்த பின்புதான் கவலைப்பட முடியும். வேறு எந்தக் கவலையும் குறுக்கிட்டு இன்று இந்தத் தூக்கத்தைக் கெடுத்து விடக்கூடாது. இன்று இப்போது நான் படுகிற கவலைகள் இரண்டே இரண்டுதான். ஒன்று நல்ல உணவு, இரண்டு ஆழ்ந்த தூக்கம். ‘கவலைதான் உறக்கத்துக்குப் பெரும் பகை’ என்று சுகபோகங்களைப் பற்றிய சுவையான சிந்தனையுடனே பெருமாளிகைக்குத் திரும்பியிருந்தார் பெருநிதிச் செல்வர். சொந்தச் சுகபோகங்களைப் பற்றிச் சிந்திப்பதற்குக் கூடத் தாம் தனியாயிருக்கும் போதுதான் அவருக்குச் சுதந்திரம். நகைவேழம்பர் கூட இருந்தால் சில பயங்களால் சொந்தச் சுகபோகங்களை நினைக்கக் கூடத் தோன்றாது அவருக்கு, தாம் சுகபோகங்களை ஆள முடிந்தவர் - என்றோ சுகபோகங்களுக்கு அதிபதி - என்றோ நினைப்புக்களை நினைத்துப் பெருமி தப்படுவதைக்கூட நகைவேழம்பர் தம் அருகிலிருக்கும் போது செய்வதற்குத் தயக்கமாகவோ அருவருப்பாகவோ இருக்கும் அவருக்கு. அதற்கு எத்தனையோ இரகசியக் காரணங்கள் இருந்தன. அவை பெருநிதிச் செல்வரே இரண்டாவதுமுறை சிந்தித்துப் பார்ப்பதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/44&oldid=1231473" இலிருந்து மீள்விக்கப்பட்டது