நா. பார்த்தசாரதி
657
என்ற அரசியல் நூல் நுணுக்கம் நினைவு வந்து மனத்தைப் பலப்படுத்தியும்கூட அரிய முயற்சியின் பேரிலேயே எதிரியின் கோபத்தை அவரால் அலட்சியம் செய்ய முடிந்தது.
எரிகின்ற நெருப்பு மலையொன்று கனன்று கொண்டே வந்து எதிரே நிற்பதுபோல் நிற்கும் நகை வேழம்பரைக் கண்டு அவருடைய அந்தக் கோபத்தை எப்படி வரவேற்று ஒடுக்குவதெனச் சிந்தித்தார் பெருநிதிச் செல்வர். எந்த வகைக் கோபத்திற்காக அதை எதிரே காணும்போதே வேர்த்து விதிர்விதிர்க்கக் கூடாதோ அந்த வகைக் கோபம்தான் அது! பின்னால் ஏற்ற சமயம் வரும்போதுதான் அந்தக் கோபத்திற்காக வேர்க்க வேண்டும் - என்று பொருள் நூல் சிந்தனை களைத் தனக்கு அரணாக ஏற்படுத்திக் கொண்டு பாதிப் பயமும் பாதித் துணிவும் கலந்த நிலையில் பெருநிதிச் செல்வர் எதிராளியைப் பார்த்துச் சிரிக்க முயன்றார். தம்முடைய சிரிப்பு எதிரியின் முகத்தில் எந்தவிதமான விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று கண்டதும் களத்தில் வெற்றியும் இன்றி வீரமரணமும் எய்தாமல் உயிரோடு தோற்றுப்போய் நிற்பதுபோல் தாமும் அப்போது தயங்கி நிற்பதாக உணர்ந்தார் அவர். அவருடைய சிரிப்பு நகைவேழம்பரின் சினத் தீயை ஆற்றுவதற்குப் பதில் வளர்த்தது.
‘என் கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை. என் நெஞ்சின் சூடு விநாடிக்கு விநாடி வளர்கிறது. எதையாவது உடனே அழித்தொழிக்க வேண்டும் என்று என் கைகள் ஊறுகின்றன. என் எதிரே வந்து நின்றுகொண்டு நீங்கள் சிரிக்கிறீர்கள்!”
“முதலில் உங்கள் கோபத்தை அழித்தொழியுங்கள்! இப்போது உடனடியாக நீங்கள் அழிக்க வேண்டிய பொருள் அதுதான். தனக்குத் தோல்வி வருகிறபோது கோபப்படுகிறவன் உண்மையான பலசாலியில்லை. நம்முடைய வாயிலின் வழியே தோல்வியும் கோபமும் சேர்ந்து உள்ளே நுழைகிறபோது தோல்வியை மட்டும்
ம-42