662
மணிபல்லவம்
பாருங்கள்! கொன்றைப்புதரின் பள்ளத்தில் நின்ற போதும் பூதச்சிலையின் முழங்கால் வரை உயரமாயிருந்த அந்தக் கம்பீரமான ஆண்மகனை அழிப்பதற்காக அவன் கழுத்துப் பிடரி உங்கள் கைக்கு எட்ட வேண்டும் என்று நீங்கள் பூதச் சிலையிருந்த மேடையில் அதன் பீடம் வரை ஏறி நின்றுகொண்டு உங்களுடைய கைகள் நடுங்கவும் அவனுடைய உடம்பில் உயிர் துடி துடிக்கவும் செய்தீர்களே; அதே காரியத்தை உங்களுக்கு நானே செய்துவிடும்படி நேர்ந்த சமயங்களில் எல்லாம் ‘இப்போது வேண்டாம். பின்னால் இன்னும் நல்ல சமயம் வரும்’ என்று எண்ணி எண்ணித் தள்ளிக் கொண்டே வந்திருக்கிறேன் நான் ! கதிரவன் உதயமாகிற இந்த வைகறை வேளையில் இதைக் கேட்டு ஏன் இப்படி நடுங்குகிறீர்? சக்கரவாளக் கோட்டத்துக் கொன்றைப் புதருக்கும், அந்தப் பூதச் சிலைக்கும் வாயிருந்தால் காலாந்தகன் துடிதுடித்து இறந்த வேதனையை இன்னும் உலகத்துக்குச் சொல்லுமே? பைரவியும் நானும் உயிருள்ளவர்களாயிருந்து அந்தக் கொலைக்கு ஒத்துழைத்துவிட்டு இப்போது சொல்லவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் வார்த்தைக்குக் கட்டுப்பட்ட ஊமைகளாய் நிற்கிறோம். நீங்களோ எனக்கு நம்பிக்கையையும், நிதானத்தையும் பற்றி இன்றைக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.” காலாந்தகன் கொலையைப் பற்றி நகைவேழம்பர் வாயிலாகக் கேட்க நேர்ந்தபோது பெருநிதிச் செல்வர் தீக்குழியில் நிற்பதுபோல் வெந்து வேர்த்து நடுங்கினார். சற்றுமுன் யாருடைய முன்னிலையில் வேர்க்கலாகாது என்று அவர் எண்ணினாரோ, அது இயலவில்லை. குரலிலும் அந்த நடுக்கம் தோன்றி அவர் மெல்லப் பேசினார்.
“அன்றைக்கு, அந்த இரவில் காலாந்தகனைக் கொன்றிருக்கவில்லையானால் இன்றைக்கு நீங்களும், நானும், பைரவியும் எமபுரியில் இருப்போம்.”
“நான் சொல்ல வந்தது அதற்கல்ல, பெருநிதிச் செல்வரே! காலாந்தகனுக்கு நீங்கள் நடத்திய உப