உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

664

மணிபல்லவம்

வழக்கம் மாறியிருக்கிறது. உங்கள் தந்தையார் மட்டும் தனியே திரும்பி வந்திருக்கிறார்! பல நாட்களுக்குப் பின்பு பெருமாளிகையில் மீண்டும் அவருடைய குரல் தனியாகக் கேட்கிறது.”

“போதுமடி வசந்தமாலை ! இவர்கள் இரண்டு பேரையும் தவிர வேறு யாரையாவது நல்லவர்களைப் பற்றிச் சிறிது நேரம் பேசு. குழப்பங்களையும், கவலைகளையும் உண்டாக்கும் மனிதர்களைப் பற்றியே எல்லா நேரங்களிலும் பேசிக்கொண்டிராதே!” என்று வேதனையோடு சலித்துக் கொண்டாள் சுரமஞ்சரி. தலைவியின் இந்த வார்த்தைகளில் இருந்த கசப்பை உணர்ந்தபின் சிறிது நேரத்துக்குத் தான் எதுவுமே பேசாமல் மெளனமாக இருந்துவிட்டால் மிகவும் நல்லது என்று உணர்ந்தாள் வசந்தமாலை.

ஒரு நோக்கமுமின்றி மாடத்தின் முன்புறமாகப் போய் மின்னத் தொடங்கியிருந்த வானத்து நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுரமஞ்சரி. சற்றைக்கெல்லாம் ஏதோ திடுமென்று நினைத்துக் கொண்டவள் போலத் தோழியிடம் மறுபடியும் திரும்பி வந்து அவளே பேசலானாள்.

“வசந்தமாலை! ஒரு காரியம் எனக்கு மறந்தே போயிற்று. முதல் வேலையாக ஐம்படை அணிகளும் கோத்த இந்தப் பொன் ஆரத்தை ஊன்றுகோலின் குழலில் இட்டு யாளி முகப்பிடியையும் திருகிக் கீழே கொடுத்து அனுப்பிவிடு. தந்தையார் ஊர் திரும்பி விட்டார். இந்தப் புதிர் இங்கே இருக்கிறவரை நமக்கு நிம்மதியில்லை. தந்தையார் கடற்பயணம் போன மறுநாளிலிருந்து இன்று வரை நானும் நீயும் எப்படி யெப்படி யெல்லாமோ முயன்று சிந்தித்துப் பார்க்கிறோம். நமக்கு இதில் அடங்கியிருக்கும் உண்மை விளங்கவில்லை. இந்த ஐம்படைத்தாலி யாருடையது? இதை ஊன்றுகோலில் இட்டு வைத்திருக்க வேண்டிய காரணம் என்ன என்று நமக்குப் புரியவே இல்லை. என் தந்தையாருக்கு மக்களாக வாய்த்த நாங்கள் இருவருமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/55&oldid=1231482" இலிருந்து மீள்விக்கப்பட்டது