பக்கம்:மணி பல்லவம் 4.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"இனிமேல்தான் தொடங்க வேண்டும். என்பதில்லை! அதை நாம் மதிக்கத் தொடங்கிய போதுதான் நமது மறைகளின் முதற் குரல் திசைகளின் செவிகளில் முதற் கேள்வியாகி ஒலித்தது. அதை நாம் மதிக்கத் தொடங்கியபோதுதான் நமது வேள்விச் சாலைவில் அது முதல் தெய்வமாய் வளர்ந்து எரிந்து கொழுந்துவிட்டது. அதை நாம் மதிக்கத் தொடங்கியபோதுதான் நம்முடைய மதிப்பு உண்மையான ஒளியைப் புரிந்து கொண்டு மதித்துப் போற்றியது.”

“அதற்குப் பெயர்?” “சுடர்.”

“அந்தச் சுடர் பொன்னின் ஒளியிலும் இருக்கிறது! அல்லவா?”

“இருக்கிறது! ஆனால் நெருப்பின் சுடரில் பொன்னி லிருப்பதைக் காட்டிலும் அதிகமான ஒளி இருக்கிறது. இயற்கைப் பொருள்களில் ஒன்றாகிய நெருப்பின் ஓர் ஒளிக்கீற்றுதான் தங்கத்திலும் தங்கமாக இருக்கிறது. தங்கமில்லாமலும் உலகில் ஒளி உண்டு. உலகில் ஒளி இல்லாவிட்டால் தங்கமே இல்லை, ஒளி இன்றேல் தங்கத்தை இப்போது புரிந்து கொண்டிருக்கிறாற் போலத் தங்கமாக மதித்துப் புரிந்து கொண்டிருக்க முடியாது.”

“தங்கத்திலிருந்து சுடரை மட்டும் பிரித்து விட்டால்?”

“சுடரிழந்த தங்கம் அப்படி அதை இழந்துவிட்ட காரணத்தால் மண்ணாயிருக்கும்.”

“அதாவது மண்ணில் சுடர் கலவாது தங்கம் இல்லை! தங்கம் கலவாத சுடர் உண்டு.”

“தங்கம் மண்ணாயிருந்தால் அதைத் தங்கமாக மதிக்கக் காரணமாயிருக்கும் ஒளியை இதில் காண முடியாது, மண் கலவாத தனி ஒளியாயிருந்தால் அதுவே சுடும்! தங்கம் ஒளியாயிருக்கிறது. சுடவும் இல்லை. அதனால்தான் சுடுகின்ற ஒளியைக் காட்டிலும் தங்கமாகிய சுடாத ஒளிக்கு அதிக மதிப்பு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/6&oldid=1231436" இலிருந்து மீள்விக்கப்பட்டது