நா. பார்த்தசாரதி
669
யின் குரலில் கடுமை பிறந்ததைப் புரிந்துகொள்ள முடியாமல் ஊன்றுகோலைக் கீழே கொடுத்து அனுப்புவதற்காகப் பணிப் பெண்ணைத் தேடிக்கொண்டு செல்வது போல அங்கிருந்து விலகிச் சென்றாள் வசந்தமாலை. தலைவி ஐம்படைத் தாலியைப் பற்றிக் கேள்வி கேட்டபோது தான் வீதியில் போகிற முல்லையைப் பற்றிச் சொல்லிப் பேச்சை மாற்றியதால் அவளுக்கு கோபம் வந்திருக்கலாமோ என்ற சந்தேகம் அப்போது வசந்தமாலையின் சிந்தனையில் படர்ந்தது. ‘தான் எதற்காகப் பேச்சை மாற்றுவதற்கு முயற்சி செய்தோம்’ என்பதை நினைத்தபோது வசந்தமாலைக்குப் பயம் பிடித்துக்கொண்டது. தலைவிக்கு அப்போது தெரிய வேண்டாமென்று தான் மறைவாகச் செய்த தந்திரத்தை வெளிப்படையாகவே தெரிவித்துவிடலாமா என்றுகூட எண்ணினாள் அவள். தந்திரங்களிலும் சூழ்ச்சிகளிலும் மனம் வெறுத்தது போலச் சுரமஞ்சரி சற்றுமுன் பேசிய பேச்சையும் இப்போது நினைத்துக் கொண்டாள் வசந்தமாலை. இதை நினைத்தபோது இந்த நினைவுக்கு முரணான காரியத்தைத் தானே சற்றுமுன் செய்திருப்பதை எண்ணி நடுங்கினாள் அவள். தான் செய்த தந்திரமே சுரமஞ்சரியின் பார்வைக்கு இலக்காகியிருக்குமோ என்று சந்தேகமும் கொண்டாள் அவள். இந்தச் சந்தேகம் ஏற்பட்ட மறுகணம் ஊன்றுகோலை அப்போது கீழே கொடுத்து அனுப்புகிற எண்ணத்தைக் கைவிட்டாள் வசந்தமாலை. ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவள்போல் திரும்பவும் தன் தலைவியின் அருகே சென்று நின்றாள் அவள். ஊன்றுகோலைத் தந்தை யாரிடம் கொடுத்தனுப்புவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற வசந்தமாலை மறுபடியும் ஊன்றுகோலுடனேயே திரும்பி வந்து நிற்பதைக் கண்டு சுரமஞ்சரி கேட்டாள்:
“என்னடி வசந்தமாலை? ஏன் ஊன்றுகோலைத் திரும்பக் கொண்டு வந்துவிட்டாய்?”
“இதோ பாருங்கள் அம்மா” என்று ஊன்றுகோலை அப்படியே தலைவியின் கைகளில் கொடுத்தாள் தோழி வசந்தமாலை.