நா. பார்த்தசாரதி
673
தலைவி இருக்கும் நிலையில் இதைக் கேட்கலாமா வேண்டாமா’ என்று பயமுமாகச் சுரமஞ்சரியைப் பார்த்தாள் வசந்தமாலை. அப்போது சுரமஞ்சரியின் முகமானது பொழுது புலர்கின்ற நேரத்தில் அழகுகள் யாவும் ஒன்று சேர்ந்து மங்கலமாய் நிறைந்தாற் போல அமைதியாயிருந்தது. எதற்காகவும் பரபரப்புக் காட்டாதது போன்ற நிறைவு அவளுடைய கண்களில் தெரிந்தது.
அதிகாலையில் தோன்றி வளர்கின்ற நேரத்து ஒளிக்கே உரிய சுறுசுறுப்போடு மாடத்தில் நுழையும் செங்கதிர்க் கற்றைகளிலே பட்டு அவளுடைய முகமும் கைகளும், பாதங்களும் நெருப்பிலே குளித்து இளகும் பொன் வெள்ளமாய்த் தெரிந்தன.
“மன்னிக்க வேண்டும் அம்மா! போது விடிந்து எழுந்ததும் எழுந்திராததுமாகச் சொல்லி மனத்தைப் புண்படுத்திவிட்டேன் போலிருக்கிறது. நீங்கள் ஆசைப்படுகிற புதிய துறைகளில் உங்கள் நாட்கள் பெருக வேண்டும். வளர்ந்து பொலிக உங்கள் ஆவல். உங்கள் மனத்துக்கு விருப்பம் இருக்குமானால் தயை கூர்ந்து எனக்கும் அதைப்பற்றிச் சொல்லுங்கள். இப்போது விருப்பமில்லாவிட்டால் விருப்பம் வருகிறபோது என்னிடம் சொன்னால் போதும்” என்று பணிவாகக் கூறி வணங்கிவிட்டு அப்பாற் சென்றாள் தோழி வசந்தமாலை.
மாலை மயங்கி இருள் சூழ்ந்து கொண்டு வரும் நேரத்துக்கு முல்லையும் கதக்கண்ணனும் வீதியில் அந்தப் பெருமாளிகையைக் கடந்து சென்ற போது அதன் மாடத்தில் தென்பட்ட சுரமஞ்சரியையும், அவள் தோழியையும் பற்றித் தங்களுக்குள் சிறிது தொலைவுவரை பேசிக்கொண்டே
ம-43