பக்கம்:மணி பல்லவம் 4.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

676

மணிபல்லவம்

இருக்கிறானா! நீங்கள் எல்லாம் உங்களை யொத்த வீரர்களை வெற்றி கொள்ளத் தவிக்கிறீர்கள். அவரைப் போன்றவர்கள் தம்மை ஒத்த அறிவாளிகளை வெற்றி கொள்ளத் தவிக்கிறார்கள்.”

“எவரைப் போன்றவர்களைச் சொல்கிறாய் முல்லை!”

“அவர்தான்! அன்றைக்குச் கப்பலில் ஏறும்போது போய்விட்டு வருகிறேன் முல்லை - என்று என்னிடம் ஒரு வார்த்தை சொல்வதற்குக்கூடத் தோன்றாமல் முகத் தைத் தூக்கிக்கொண்டு போனாரே, அந்த மனிதரைத் தான் சொல்கிறேன் அண்ணா” - என்று பேசிக் கொண்டே குனிந்து தரையைப் பார்த்தாள் முல்லை. அந்த நேரத்தில் தன் முகத்தைத் தமையன் பார்த்து விடலாகாது என்று தோன்றியது அவளுக்கு. ஆனாலும் அவன் பார்த்துவிட்டான்.

“புரிகிறது முல்லை! இப்போதுகூட நீயும் நானும் அவருடைய கோவிலுக்குத்தானே வணங்குவதற்குப் போய்க் கொண்டிருக்கிறோம். முருகக் கடவுளாகிய செவ்வேளுக்குத்தானே இளங்குமரன் என்று மற்றொரு பெயர் கூறுகிறார்கள்? அவருடைய ஞாபகம் வந்ததனால்தானோ என்னவோ இன்று மாலை நீ ஒரு நாளுமில்லாத திருநாளாய்ப் பட்டினப்பாக்கத்துக்கு வந்து இளங்குமரக் கடவுளாகிய செவ்வேள் திருக்கோவிலை வணங்க வேண்டும் என்றாய்! உன்னுடைய திருட்டுத்தனமான மனக்குறிப்பு இப்போதல்லவா எனக்குப் புரிகிறது?- என்று கதக்கண்ணன் அவளை வம்புக்கிழுக்கத் தொடங்கியபோது, இந்த வம்பு தன்னிடம் படிப்படியாய் விளைவிக்கும் நாணங்களை மறைக்க விரும்புகிறவள் போல் அரசர் பெருந்தெருவின் அகன்ற சாலையில் விரைந்து நடந்தாள் முல்லை. கதக்கண்ணனும் தொடர்ந்து அவள் வேகத்திற்கு இணையாக நடந்தான். மாபெரும் அரண்மனையும் அதைச் சுற்றிலும் கண் பார்வைக்கு எட்டும் தொலைவு வரை அரண்மனையைப் போலவே தெரிந்த வேறு பல பெருமாளிகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/67&oldid=1231495" இலிருந்து மீள்விக்கப்பட்டது