பக்கம்:மணி பல்லவம் 4.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

677

களுமாகத் தோன்றின. பூம்புகார் நகரத்தின் இதயம் போன்ற ஆரவாரமான பகுதிக்குள் புகுந்து வந்திருந் தார்கள் அவர்கள். இன்னும் சிறிது தொலைவு சென்று அடுத்த வீதியில் திரும்பினால் ஆறுமுகச் செவ்வேளாகிய முருகப் பெருமானின் அணிதிகழ் கோவில் தென்படும். கோவிலின் மேலே ஒளிவீசிப் பறக்கும் சேவற்கொடி அப்போது அவர்கள் நடந்து கொண்டிருந்த இடத்திலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அரண்மனையின் முரச மண்டபத்தில் மாலை நேரத்து மங்கல வாத்தியங்கள், முழங்கிப் பரவிக் கொண்டிருந்தன.

பல்வேறு பூக்களின் நறுமணமும், தீப வரிசைகளின் ஒளியும், தேரும், குதிரையும், யானையும், சிவிகையும் நிறைந்த இராசவீதியில் கலகலப்பும் இந்திரனுடைய தேவருலகத்துத் தலைநகரமாகிய அமராபதியின் வீதிகளில் நடந்து போய்க் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வை முல்லையின் மனத்தில் ஏற்படுத்தின. செவ்வேள் கோவில் மாடத்தின்மேல் தெரிந்த சேவற் கொடி இளங்குமரன் அன்று நாளங்காடியில் ஏந்தி நின்ற ஞானக்கொடியாக மாறி அதைப் பற்றிக்கொண்டு அவனே நிற்பதுபோல அவள் கண்களுக்கு மட்டும் தெரிவது போலிருந்தது. தனக்கு நினைவு தெரிந்த நாளி லிருந்து இளங்குமரனுடன் தான் பழக நேர்ந்த காலத்து நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாகத் தன் மனக்கண்களில் அவளுக்குத் தெரிந்தன. அவள் அப்போது உணர்ச்சி மயமாக நெகிழ்ந்த மனத்துடனிருந்தாள். அறுமுகச் செவ்வேளாகிய குமரக் கடவுளின் அணிதிகழ் கோவிலுக்குள் நுழைந்தபோது அதற்கு முன்பே தன் மனத்தில் நுழைந்து கோவில் கொண்டுவிட்ட மற்றொரு குமரனையும் வணங்கிக் கொண்டிருந்தாள் முல்லை. அப்போது அவளுடைய மனநிலைக்குப் பொருத்தமான உற்சாகப் பேச்சு ஒன்றை அவளுடைய தமையனும் தொடங்கினான்:-

“முல்லை! அந்த இளங்குமரன்மேல் ஆசைப்படுகிற பெண்கள் மட்டும்தானே உன்னுடைய பொறாமைக்கும் பகைமைக்கும் உரியவர்கள்? இந்த இளங்குமரனைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/68&oldid=1231496" இலிருந்து மீள்விக்கப்பட்டது