உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

678

மணிபல்லவம்

தேடி வருகிறவர்களையும் அப்படி நினைத்துவிடாதே. இவன் இந்தக் காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள எல்லாரும் ஆசைப்படுவதற்கு உரியவன். இவனையாவது எல்லோரும் நினைக்கவும் ஆசைப்படவும் நீ உரிமை தருவாயோ இல்லையோ?” என்று கோவிலுக்குள் இருந்த குமரக் கடவுளைக் காட்டி நகைச்சுவையாகக் கதக்கண்ணன் கூறிய சொற்கள் முல்லையின் மனத்தில் மணமிக்க மலர்களை அள்ளிச் சொரிந்தாற்போல் பதிந்தன.

அப்போது செவ்வேள் கோவிலில் மணி ஒலித்தது. கண்முன் தெரிந்த கோவிலில் காவிரிப்பூம்பட்டினத்துத் தெய்வமான இளங்குமரனையும் - தன் மனத்தில் கோவில் கொண்டு தனக்குத் தெய்வமாகிவிட்ட இளங்குமரனையும் சேர்த்தே வணங்கினாள் முல்லை.

“உன்னுடைய இளங்குமரன் கப்பலில் ஏறி மணி பல்லவத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறான் முல்லை! இந்த இளங்குமரனோ எங்கும் நகரவே முடியாமல் இந்தப் பட்டினப்பாக்கத்துக் கோவிலில் பெரிய பெரிய செல்வர்களின் வணக்கங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு இங்கேயே நிற்கிறான்.” என்று கதக்கண்ணன் விளையாட்டாகக் கூறியபோது அந்த இளங்குமரனும் இந்தச் செவ்வேளைப் போலவே தான் மட்டும் வணங்க முடிந்த கோவில் ஒன்றில் நகராமல் தெய்வமாக நின்றுவிட்டால் எவ்வளவு நலமாக இருக்குமென்று விநோதமானதொரு கற்பனை நினைப்பில் மூழ்கினாள் முல்லை.

“அடடா! இந்தக் குமரனையும் உனக்கே தனியுரிமையாக்கிக் கொண்டு விடுவாய் போலிருக்கிறது முல்லை. நாம் வந்து நேரமாகிவிட்டது. திரும்பலாம் அல்லவா?” என்று தமையன் நினைவூட்டியபோதுதான் செவ்வேள் கோவிலிலிருந்து திரும்பி வீட்டுக்குப் புறப்படும் நினைவு வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/69&oldid=1231498" இலிருந்து மீள்விக்கப்பட்டது