680
மணிபல்லவம்
அந்த எல்லைக்கு அப்பால் அதைவிட நிறைவாகவோ அதைவிட அழகாகவோ ஆசைப்படுவதற்கு வேறு ஏதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை அவளுக்கு. பண்ணோடு கலந்து நின்று இனிமை தரும் இசையைப் போல் அதற்கப்பால் விலகாமல் அதிலேயே பொருந்தி விட்டது அவள் ஆசை. தன்னுடைய பேதைப் பருவத்தில் உடம்பை அழகு செய்யும் பட்டுக்களுக்கும், அணி கலன்களுக்கும் வகை வகையாக ஆசைப்பட்டிருக்கிறாள் அவள். நினைவு தெரிந்து அறிவு வளர்ந்தபின் சுவடிகளுக்கும் ஓவியங்களுக்கும் ஆசைப்பட்டிருக்கிறாள். இந்த ஒவ்வொரு வகை ஆசையிலும் மனம் பித்தேறி அழுந்தியதைப் போலவே ஒரொரு சமயங்களில் சோர்ந்து சலித்துப் போகிற அநுபவமும் அவளுக்கு ஏற்பட்டிருக்கிறது. வீதியெல்லாம் சுற்றிவிட்டு நிலைக்கு வந்த தேரின் சக்கரத்தில் அப்போது தரையைத் தீண்டிக் கொண்டு இருக்கிற பகுதி ஏதுவோ அதுவே அதற்கு நிற்குமிடமாகி விடுவதுபோல் முன்பு சேர்த்த சுவடிகளையெல்லாம் ஊன்றிக் கற்க வேண்டுமென்ற ஆவலை அன்று அவள் அடைந்திருந்தாள். இளமையில் காவிரிப்பூம்பட்டினத்திலேயே புகழ்பெற்ற பெரும்புலவர் ஒருவரைக்கொண்டு தந்தையார் அவளுக்கும் வானவல்லிக்கும் இலக்கியங்களையும், காவியங்களையும் கற்பிக்க ஏற்பாடு செய்திருந்தார். அப்போது அவள் அவற்றைக் கற்ற காலமும் குறைவானது. கற்பிக்கப்பட்ட சுவடிகளும் குறைவானவை. தகடாக அறுத்து இழைத்த யானைத் தந்தத்திலும் மெல்லிய சந்தனப் பலகைகளிலும் உறையிட்டுப் பட்டு நூல்களால் இறுக்கிக் கட்டி அடுக்கப்பட்டிருந்த அந்த ஏட்டுச் சுவடிகளின்மேல் இன்று மறுபடியும் சுரமஞ்சரியின் கவனம் சென்றது. பெருமாளிகையின் சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் மறந்து விட்டு நினைவுகளின் தரத்தையும் எண்ணங்களின் உயரத்தையும் வளர்த்துக் கொள்வதற்காகக் காவியங்களிலும் இலக்கியங்களிலும் தன்மானத்தைச் செலுத்த வேண்டுமென்று தோன்றியது சுரமஞ்சரிக்கு. தான் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறவருடைய மனத்தின்