பக்கம்:மணி பல்லவம் 4.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

682

மணிபல்லவம்

ஒன்றுதான் அவள் மனத்தின் ஆசை நிரந்தரமாக நின்ற கடைசி எல்லையாக அவளை ஆக்கியிருந்தது.

இலக்கியங்களையும், காவியங்களையும் தங்கள் உறவையும் எண்ணிப் பார்த்துப் பழகிய காரணத்தால் ஏட்டுச் சுவடிகளில் வாழும் அந்த உணர்வுகளின் மணத்தில் திளைத்துத் திளைத்துத் தன் மனம் நிற்கும் எல்லையைத் தனது தவமாகவே ஆக்கிக் கொண்டுவிட வேண்டும் என்ற பிடிவாதம் பிறந்தது அவளுக்கு. இந்தப் பிடிவாதம் பிறந்த பின்னால் தான் இருக்கும் மாடம், தன்னோடு துணையிருக்கும் வசந்தமாலை, தன் தந்தை, நகைவேழம்பர் எல்லாரும் எல்லாமும் அவளுக்கு மறந்தே போயினர்.

அன்று காலையில் சுரமஞ்சரியின் கையிற் கிடைத்த முதற் சுவடியில் அவள் மனத்தின் தவிப்புக்களையே மேலும் வளர்ப்பதுபோல் ஒரு பழைய பாடல் வந்து வாய்த்தது.

"வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய்கணை நிழலின் கழியும், இவ் உலகத்துக்
காணீர் என்றலோ அரிதோ
அதுநனி பேணிர் ஆகுவீர்...”

ஒரு தலைவனிடம் அவனாற் காதலிக்கப்படும் காதலியின் தோழி ஒருத்தி சொல்வதாக இப்பகுதி அமைக்கப்பட்டிருந்தது. “வேகமாகத் தொடுக்கிற அம்பின் நிழல்போல் இந்த வாழ்க்கையும் இதன் இளமைப் பருவத்துச் சுகங்களும் உண்டாகிய வேகம் தெரிவதற்கு முன்பே மறைந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய உலக வாழ்வின் நிலையை நீங்கள் காணாதவர் இல்லை. இதை உணர்ந்து என் தலைவியை விட்டுப் பிரியாமல் அவள் மேல் நீங்கள் அன்பு செலுத்த வேண்டும்” என்று தன் தலைவியின் சார்பில் அந்தப் பாடலில் வருகிற தோழி தலைவனிடம் கூறி வேண்டிக் கொள்வதாக இருந்த இப்பகுதியை ஏட்டிலிருந்து சுரமஞ்சரி படித்துக்கொண்டிருந்த போதுதான் வசந்தமாலையும் அவளருகே வந்து நின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/73&oldid=1231501" இலிருந்து மீள்விக்கப்பட்டது