உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

684

மணிபல்லவம்

உவமைகளையும், உருவங்களையும் கூறி, அவருடைய மனத்தை இளக்க வேண்டும்போல எனக்கு ஆசையாயிருக்கிறது.’

“போடீ வேலையற்றவளே. இந்தப் பிறவியின் ஆசைகளே இன்னும் தீர்ந்தபாடில்லை. அதற்குள் நீ அடுத்த பிறவிக்குப் போய்விட்டாயே?” என்று தோழிக்குப் பதில் கூறியபோது சுரமஞ்சரியின் கண்களில் தெரிந்த அழுகை குரலிலும் ஒலித்தது. அப்போது அவள் கைகளிலிருந்த அந்த ஏடு கண்ணீரில் நனைந்து கொண்டிருந்தது. தன் தலைவியை அழச் செய்த அந்த ஏடுகளின்மேல் கோபம் கோபமாக வந்தது வசந்தமாலைக்கு. அதே சமயத்தில் தலைவி எதற்காக அழுகிறாள் என்ற சந்தேகமும் அவளுக்கு ஏற்பட்டது. ஏட்டிலே கண்ட பாட்டுக்காக அழுகிறாளா, பாட்டிலே திகழும் கருத்தால் தன் மனம் எவனை நினைவு கூர்ந்ததோ அவனுக்காக அவனை எண்ணி அழுகிறாளா என்று ஒன்றும் தெளிவாகப் புரியாமல் மருண்டாள் வசந்தமாலை. இதுவரை என்றும் ஏற்பட்டிருக்க முடியாத நிறைந்த அநுதாபம் அன்று வசந்தமாலைக்குத் தன் தலைவியின்மேல் ஏற்பட்டது.

11. தேடிக் குவித்த செல்வம்

பொழுது புலர்ந்ததும் புலராததுமாக வந்து நகைவேழம்பர் நினைவுபடுத்திய பழைய நினைவுகளால் பெருநிதிச் செல்வர் சாகின்ற காலத்து வேதனைகளையெல்லாம் உயிருடனேயே அப்போது அடைந்தவராக நடுங்கி நின்றார். ஆந்தை விழிப்பதுபோல அவருடைய கண்கள் புரண்டு உருண்டு விழித்தன. முகத்திலும் பிடரியிலும் வேர்த்துக் கொட்டியிருந்தது. மனத்தின் கருத்தோடு ஒத்துழைக்காத நலிந்த குரலில் அவர் நகைவேழம்பருக்குப் பதில் கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/75&oldid=1231503" இலிருந்து மீள்விக்கப்பட்டது