686
மணிபல்லவம்
-எதிரே நிற்கிற ஒற்றைக் கண்ணனிடம் பெருநிதிச் செல்வருக்கு மதிப்புக் குறைந்து போய்விட்ட காரணத்தினால் “நீ, உன்னை என்று ஏகவசனத்தில் அலட்சியமாகப் பேசத் தொடங்கிவிட்டார். அதனால் இந்தப் பேச்சு எதிராளியை இன்னும் கொதித்தெழச் செய்தது.
“இந்த அசுரப் பிறவியின் சூழ்ச்சிகள் கற்பித்த வழியில் போய்த்தான் சோழ மன்னரிடம் பெருமதிப்புக்குரிய எட்டிப்பட்டம் பெற்றீர்கள். இந்த அசுரப் பிறவியின் சூழ்ச்சியைக் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்ட வழிகளில் போய்த்தான் உங்களுடைய அந்தரங்க நிலவறையில் தாழி தாழியாகப் பொன்னும் மணியும் முத்தும் சேர்த்துக் குவித்திருக்கிறீர்கள். இந்த ஒற்றைக் கண்ணால் நான் உலகத்தைப் பார்த்துத் தெரிந்துகொண்ட அநுபவங்களிலிருந்துதான் இரண்டு கண்களால் கூடப் பார்த்து முடிக்க இயலாத அவ்வளவு செல்வத்தை உங்களுடைய நிலவறையில் நிறையக் குவித்திருக்கிறேன்.”
எதிரி திரும்பத் திரும்பத் தன்னுடைய செல்வத்தைப் பற்றியே நினைவூட்டிப் பேசியதைக் கேட்டுப் பெருநிதிச் செல்வருக்குப் பொறுமை போய்விட்டது. அளவற்ற ஆத்திரம் பிறந்தது அவருக்கு.
“பேயே! செல்வம் செல்வமென்று பறக்கின்றாயே! நிலவறையைத் திறந்து விட்டு விடுகிறேன். உனக்கு வேண்டியதை அதிலிருந்து வாரி எடுத்துக்கொண்டு போய்விடு. மறுபடி நீ என் முகத்தில் விழிக்காதே...” என்று கூறியவராகத் தம்முடைய பள்ளியறையிலிருந்தே நிலவறைக்குள் போவதற்குரிய வழியாகக் கீழே இறங்கும் படிக்கட்டில் நகைவேழம்பரையும் கைப்பற்றி இழுத்துக் கொண்டு வேகமாகப் பாய்ந்து இறங்கினார் பெருநிதிச் செல்வர்.
“கையை விடுங்கள். நான் வாரிக்கொண்டு போவதற்கு உங்களுடைய அநுமதி எதற்கு? நானே அதைச் செய்து கொள்கிறேன்!” என்று தன் கையைப் பெருநிதிச் செல்வருடைய பிடியிலிருந்து உதறிக்கொண்டு அவரைப்