நா. பார்த்தசாரதி
687
பின்தொடர்ந்தார் நகைவேழம்பர். நிலவறைக்குச் செல்லுவதற்காக ஒவ்வொரு படியாய் மிதித்துக்கொண்டு கீழே இறங்கியபோது, தாம் மிதிக்கின்ற ஒவ்வொரு மிதியும் நகைவேழம்பருடைய கழுத்தில் படுவதுபோல் பாவித்துப் பல்லைக் கடித்துக் கொண்டு சென்றார் பெருநிதிச் செல்வர். பெருநிதிச் செல்வரையே அழுத்தி மிதிப்பதாக நினைத்துக் கொண்டு சென்றார் நகைவேழம்பர். கீழே நிலவறை வந்தது. செல்வம் குவிந்திருக்கிற இடத்துக்கே மணமும் உண்டு போலும். சந்தனமும் அகிற் புகையும், பச்சைக் கற்பூரமும் அந்தப் பகுதியிற் குவிந்திருக்கிற செல்வத்தின் மிகுதியை எடுத்துச் சொல்லுவன போல் நறுமணம் பரப்பிக் கொண்டிருந்தன. தரையில் விலை மதிப்பற்ற சீனத்துப் பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டி ருந்தது.
என்றாலும் அப்போது அந்த நிலவறைக்குள் புகுந்த இருவருக்கும் நறுமணத்தை உணர்கிற எண்ணமோ, பட்டுக் கம்பளத்தில் மென்மையை உணர்கிற நளின உணர்வோ சிறிதும் இல்லை. அந்த இருவருடைய நிலை யையும் கண்டு சந்தர்ப்பம் தெரியாமல் பெரியவர்கள் முன்னால் சிரித்து அவர்களுடைய கோபத்தைக் கிளறிவிடுகிற சிறு பிள்ளைகளைப் போல் அங்கே குவிந்திருந்த முத்துக்களும், மணிகளும், பொற்காசுகளும் ஒளி மின்னிச் சிரித்தன. அந்த இரண்டு பேருடைய கோபத்துக்கும் நடுவே அவை இயல்பாக மின்னுவதுகூட அதிகமான துடுக்குத் தனமாகத் தோன்றுவது போலிருந்தது.
அவர்கள் இருவருக்கும் வழக்கமான நெஞ்சுத் துடிப்பைவிட அதிகமான விரைவோடு மூச்சும் இதயமும் அடித்துக்கொண்டன. விநாடிக்கு எத்தனை முறை துடிக்கிறது என்று நினைக்கவும் முடியாத வேகத்தோடு இதயம் துடித்தது. அறையில் மூலைக்கு மூலை இறைந்து கிடந்த தனித்தனி மாணிக்கக் கற்கள் எல்லாம் செக்கச் செவேரென்று மின்னியபோது அவை அத்தனையும் தனித்தனியே நகைவேழம்பரின் ஒற்றைக் கண்ணாகத் தோன்றின பெருநிதிச்செல்வருக்கு. ‘நிலவறையின்