பக்கம்:மணி பல்லவம் 4.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

693

இறங்கும் படிகளில் சிலம்பொலியும் வளைகளின் ஒலியும் மெல்லக் கிளர்ந்து ஒலிக்கும்படி யாரோ நடந்து இறங்கி வருகிற ஒலி கேட்கவே, நகைவேழம்பர் பெருநிதிச் செல்வரைத் தம்முடைய முரட்டுப் பிடியிலிருந்து விடுதலை செய்துவிட்டுத் திரும்பினார். வருவது யார் என்று அறிந்துகொள்ளும் ஆவலில், பெருநிதிச்செல்வரின் கண்களும் படியிறங்குகிற பகுதியில் திரும்பின.

வானவல்லி மெல்ல அடிமேல் அடி வைத்துப் படியிறங்கி வந்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின் அவளுடைய அன்னையும் பெருமாளிகைப் பணிப் பெண்கள் இருவரும் ஆக நான்கு பெண்கள் நிலவறைக்கு வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன காரியத்துக்காக அப்போது அங்கே இறங்கி வந்து கொண்டிருந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், தனக்கு ஒருவிதத்தில் மிகவும் அருமையான பயனை விளைவிக்கத் தக்கதாக, அவர்களுடைய குறுக்கீடு அமைவதை எண்ணி எண்ணி வியந்தார் பெருநிதிச் செல்வர். அவர் வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த நிகழ்ச்சியில் அவரை முற்றிலும் கைவிட்டு விடுகிறாற் போல் ஒரு மாறுதல் நிகழ்ந்துவிட இருந்தது. நிலவறைக்குள் நின்றுகொண் டிருந்த நகைவேழம்பரையும் அவரையும் பார்த்து விட்டு ‘இப்போது இங்கே நுழைய வேண்டாம்’ என்று குறிப்போடு, திரும்புகிற எண்ணத்துடன் அந்தப் பெண்கள் தயங்கி மேலே மீண்டும் போக இருந்தபோது பெருநிதிச் செல்வரே முந்திக் கொண்டார். “வானவல்லி! நீயும் உன் அன்னையும் ஏன் அங்கேயே நின்றுவிட்டீர்கள்? நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோமே என்பதற்காக நீங்கள் தயங்கித் திரும்ப வேண்டியதில்லை. உங்களுக்கு ஏதாவது மாலையில் கோப்பதற்கு முத்துக்கள் வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். வாருங்கள் உங்களுக்கு வேண்டிய முத்துக்களைப் பொறுக்கிக் கொள்ளலாம். நகைவேழம்பர் வேறு துணையிருக்கிறார். முத்துக்களை பொறுக்கித் தேர்ந்தெடுப்பதில் இணையற்ற திறமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/84&oldid=1231515" இலிருந்து மீள்விக்கப்பட்டது