உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



13. நீலநாகரின் நினைவுகள்

நீலநாகருடைய வாழ்க்கையில் சந்திப்புக்கும், பிரிவுக்கும், அதிகமான வாய்ப்புக்கள் ஏற்பட்டதில்லை. யாரையாவது சந்திக்க வேண்டும் என்று தவித்துத் தவித்து அவர் வருந்தியதுமில்லை. அப்படித் தன்னைத் தவிக்கச் செய்தவரை எதிரே சந்தித்து அதனால் மகிழ்ந்ததுமில்லை. பிரிந்து துக்கப்பட்டதும் இல்லை. ஊசியின் நுனிபோல் வீரனுடைய வாழ்க்கை, குறி வைப்பதில் தைத்துப் பாய்கிற தன்மை ஒன்றே ஆற்றல். எஃகுபோல் இறுகிய உடலும் உள்ளமும் கொண்டு நெடுங்காலமாகச் சிறந்து விளங்கி வரும் ஆலமுற்றத்து மரம்போல் படர்ந்து நிமிர்ந்து தனி நின்ற பெரு வீரராகிய அவர் இப்போது முதன் முதலாக ஒரு பிரிவை உணர்ந்தார். இன்னதென்று கூற முடியாத ஏதோ ஒரு உணர்வுதம் மனத்தில் கலங்குவதையும் கலக்குவதையும் அறிந்தபோது அதுதான் பிரிவாயிருக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது. யாருடைய பயணத்தினால் இப்போது அவருடைய மனம் பிரிவை உணர்கிறதோ அவனுடைய வாழ்வின் தொடக்க நாளிலிருந்தே அவனைச் சில நாட்கள், பல நாட்கள், திங்கள்கள் காணவும் பேசவும் நேராமல் பிரிந்திருக்கிறார் அவர். அப்போதெல்லாம் அதைப் பிரிவென்று உணரவோ அதற்காகக் கலங்கவோ தோன்றியதில்லை அவருக்கு. படைக்கலப் பயிற்சியை எல்லாம் முடித்துக் கொண்டு இளங்குமரன் ஆல முற்றத்திலிருந்து அருட்செல்வருடைய தவச் சாலையிலேயே போய் வசிக்கத் தொடங்கியபோதோ அவன் திருநாங்கூரில் தங்கியிருந்த போதோ காவிரிப்பூம்பட்டினத்தில் அவன் இல்லை என்பதை மட்டும் அவர் உணர்ந்திருந்தாரே ஒழிய அதற்காகச் சிறிதும் வருந்தியதில்லை. இன்று அவனை மணிபல்லவத்துக்குக் கப்பலேற்றிய பின்போ அதற்காக வருந்தவும், அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/86&oldid=1190656" இலிருந்து மீள்விக்கப்பட்டது