உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

696

மணிபல்லவம்

பிரிவை உணரவும் வேண்டும்போல அவர் தவித்தார். திருநாங்கூரில் பெற்ற கல்வியோடு. அந்தக் கல்வியால் அழகு பெற்று, அகமும் முகமும் ஒளிர வந்து நின்று பூம்புகாரில் பேரறிஞர்களையெல்லாம் வென்று வாகை சூடிய வெற்றியோடு அவன் மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுச் சென்றபோது தன் பக்கத்திலேயே தன்னோடு இருக்க வேண்டிய அரும் பொருள் ஒன்று தன்னிடமிருந்து பிரிந்து செல்லுவது போல எண்ணி ஏங்கினார் அவர். ‘வாளையும் வேலையும் எடுத்து ஆள்வதுதான் ஆண்மை என்று எண்ணிக் கொண்டிராதே. மனதை நன்றாக ஆளவேண்டும் அதுதான் ஆண்மை’ என்று எப்போதோ இளங்குமரனுக்கு அறிவுரை சொல்லியிருந்தார் அவர். ஆனால் தன்னுடைய மனத்தையே ஆள முடியாமல் அவர் இப்போது தவித்தார். மூப்புக் காலத்தில் தன் ஒரே புதல்வனைப் பிரிய நேர்ந்த தந்தையின் தளர்ந்த மனநிலையோடு இருந்தார் அவர்.

இந்த இளங்குமரனுக்கும், தனக்கும் முன் பிறவி தொடர்பு ஏதேனும் விட்டகுறை தொட்ட குறையாக இருக்க வேண்டுமென்று தோன்றியது அவருக்கு. ஆல முற்றத்துப் படைக்கலச் சாலையில் அந்த விநாடியிலும் அவரைச் சுற்றி அவருடைய மாணவர்களாக நூற்றுக் கணக்கான இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் தன்னைத் தெய்வமாக மதித்து வணங்குகிறவர்கள் என்றும் அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் மனம் இளங்குமரன் ஒருவன் மேல்தான் பாசம் கொண்டது. தான் கற்பித்த படைக்கலப் பயிற்சியையும் விட அதிகமாக மனத்துக்கு வளந்தர முடிந்த பயிற்சியை அவன் திருநாங்கூரில் பெற்றுக் கொண்டு வந்திருப்பதாகவும் அவருக்குத் தோன்றியது. அவன் மனத்தினாலும் சிந்தனைகளாலும் முதிராதவனாக உடலினால் மட்டும் வலிமை முதிர்ந்து நின்றபோது இதே ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் தான் அவனுக்கு அறிவுரை கூற நேர்ந்த சந்தர்ப்பங்களையும் திருநாங்கூரிலிருந்து திரும்பியபின் மனத்தினாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/87&oldid=1231517" இலிருந்து மீள்விக்கப்பட்டது