நா. பார்த்தசாரதி
697
சிந்தனைகளாலும் முதிர்ந்து அவனே பலருக்கு அறிவுரை கூற நேர்ந்த சந்தர்ப்பங்களையும் இணைத்து நினைத்துப் பார்த்தபோது நீலநாகருடைய விழிகளில் ஆனந்தக் கண்ணீர் அரும்பிற்று. ஒரு காலத்தில் தனக்குக் கற்பித்தவற்றைக் காட்டிலும் அதிகமானவற்றைத் திருநாங்கூர் அடிகள் இளங்குமரனுக்குக் கற்பித்திருப்பதாகத் தெரிந்தும் தன்னுடைய ஆசிரியரிடம் அவருக்குக் கோபமோ, பொறாமையோ வரவில்லை.
“அவருடைய தத்துவங்கள் நிலைத்து வாழ்வதற்குத் தகுந்த உரமான மனநிலம் எது என்று தேடி உணர்ந்து அதில் அவர் அவற்றைப் பயிர் செய்திருக்கிறார்” என்று திருப்தி கொண்டாரே தவிரச், சிறிதும் பொறாமைப்படவில்லை. மாறாகப் பலமுறை அதற்காகப் பெருமைப்பட்டிருக்கிறார் அவர்.
“நீலநாகர்! நான் இவ்வளவு காலம் தவம் செய்து கொண்டிருந்ததன் பலனே இப்போது இந்த மாணவனாக விளைந்து என்னிடம் வந்திருப்பதாக எண்ணுகிறேன். பெண்களுக்கு நல்ல நாயகர்கள் கிடைப்பது போல் கலைகளுக்கும் அவற்றை ஆள்பவர்கள் தகுதி நிறைந்தவர்களாகக் கிடைக்க வேண்டும். இந்த இளைஞனுடைய மனம் எதையும் ஆள்வதற்கு உரிய பக்குவம் பெற்றிருக்கிறது. ‘நான் குருவாகக் கிடைத்ததற்கு முற்பிறவியில் தாங்கள் தவம் செய்திருக்க வேண்டும்’ என்று எத்தனையோ இளைஞர்கள் என்னிடமே என்னை வியந்திருக்கிறார்கள். நானோ இளங்குமரன் என்னும் ஒரு சிறந்த மாணவன் என்னிடம் வந்து சேர்வதற்காக இத்தனை நாள் எனக்குள்ளே தவம் செய்து கொண்டிருந்ததாக உணர்கிறேன்-” என்று முன்பு எப்போதோ திருநாங்கூரடிகள் தன்னிடம் மனம் நெகிழ்ந்து கூறியிருந்ததை நினைத்துக் கொண்டார் நீலநாகர். திருநாங்கூர் அடிகள் யாரைப் பற்றியும் எதற்காகவும் மிகைப்படப் புகழ்ந்து பேசாதவர். பிறருடைய தகுதிகளைக்கூடப் புரிந்து மனத்தில் நினைத்துக் கொள்வதுதான் அவருடைய வழக்கம். அப்படிப் பட்டவருடைய சொற்களாலேயே இளங்குமரன் புகழப்