உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

698

மணிபல்லவம்

பட்டதை நினைத்தபோது மெய்சிலிர்த்தார் நீலநாக மறவர். தன்னைப் புகழ்வதாலும் கூட அப்படிப் புகழ்கிறவர்களை இன்பமடையச் செய்யும் பவித்திரமான பிறவியாக அவன் தோன்றியிருப்பதை இந்தச் சம்பவத்தின்போது நீலநாகர் புரிந்துகொண்டார்.

இளங்குமரன் காவிரிப்பூம்பட்டினத்துச் சம்பாபதி வனத்தில் விடலைப் பருவத்து இளைஞனாகத் திரிந்து முரட்டுச் செயல்களைப் புரிந்தபோதுகூட அப்படியும் ஒரு காட்டாற்று வாழ்க்கையைச் சிறிது காலம் வாழ்ந்து பார்த்துவிட்டுப் பின்பு அதில் ஒன்றுமில்லை என்று கைவிட்டு விடுவதற்காகவே அவன் அப்படி வாழ்ந்தது போலத் தோன்றியது நீலநாகருக்கு. அவனுடைய இளமைப் பருவத்து வாழ்வை எண்ணியபோது ‘பயனில்லாத காரியத்தைச் செய்வதிலும் இன்னதிலே இன்ன காரணத்தினால் பயனில்லை என்று பயனின்மையைப் புரிந்து கொள்வதாகிய ஒரு பயன் உண்டு’ என்று மணி பல்லவத்துக்குக் கப்பலேறிப் புறப்படுவதற்கு முந்திய நாள் அவனே வளநாடுடையாரிடம் கூறிக்கொண்டிருந்த சொற்களைத்தான் இப்போது நினைத்துக்கொண்டார் நீலநாகர். அப்படிப் பயனின்மையைப் புரிந்துகொள்வதற்கு வாழ்ந்த வாழ்க்கைதானோ அந்தப் பருவத்தில் அவன் வாழ்ந்தவை என்று நினைந்து வியக்க முடிவது தவிர அதைப் பற்றிப் பிழையாக எண்ணுவதற்கு வரவில்லை அவருக்கு. ‘இந்த உடம்பின் வலிமையை எதிர்ப்பதற்குத் துணிவுள்ளவர்கள் யாராவது இருக்கிறார்களா?” என்று எதிரே வருகிறவர்களையெல்லாம் கேள்வி கேட்பது போன்ற உடம்போடு அப்போது மதர்த்துத் திரிந்த அதே இளங்குமரன்தான் இப்போது நாளங்காடியில் அந்தப் பட்டினப்பாக்கத்துப் பெண்னின் மேல் இந்திர விழாக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடுஞ் சீற்றமடைந்து கல்லெறிய முற்பட்டபோது அந்தக் கல்லெறியை எல்லாம் தன் உடலில் தாங்கிக்கொள்ள முன்வந்து அருள்நகை பூத்தவன் என்பதை நினைத்துக் கொண்டார் நீலநாகர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/89&oldid=1231520" இலிருந்து மீள்விக்கப்பட்டது