702
மணிபல்லவம்
அளிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களில் வளரவும் பயன்படாமல், அழியவும் பயன்படாமல், வீணாய்ப் போன சந்தர்ப்பங்களை வரிசையாக நினைத்துக் கொண்டால் நான் நிறைய வீணாகியிருப்பதாய்த்தான் எனக்கே தெரிகிறது.
நான் இனிமேலும் வீணாகக் கூடாதென்று முயன்று கொண்டிருக்கும்போது என் முயற்சியே வீணாகிவிட்டது. எனக்கு மீதமிருக்கிற இந்த ஒரு கண்ணால்கூட நான் பார்ப்பதற்கு இனி ஒன்றுமில்லைதான். இனிமேல் என்னுடைய வழி நிச்சயமாக இருண்டு போய்விட்டது. இனி நான் எந்த வழியைப் பார்ப்பதென்று எனக்கே விளங்கவில்லை. இதோ இப்போது இங்கே என் வழி அடைக்கப்பட்டு இருண்டு போயிருப்பதைப்போல் நான் என்னுடைய எதிரியின் வழியை அடைத்துவிடுவதற்கு நேர்ந்த சந்தர்ப்பங்களையெல்லாம் நழுவ விட்டிருக்கிறேன். நானும் பெருநிதிச் செல்வரும் நண்பர்களாக இருந்து எங்களுக்கு வேறு எதிரிகளைத் தேடிக் கொண்ட காலம் மலையேறிவிட்டது. மற்றவர்களை எதிர்ப்பதற்காகவும் கெடுப்பதற்காகவும் தங்களுக்குள் நண்பர்களாகச் சேர்ந்த இருவர் அதே கெடுதலையும் எதிர்ப்பையும் தங்களுக்குள் சொந்தமாகவே அநுபவிக்க நேரிட்டால் இப்படித்தான் ஆகும் என்கிற விளைவு இன்று எனக்குத் தீர்மானமாக விளங்கிவிட்டது.
இருளில் கன்னத்தில் கையூன்றியபடியே அமர்ந்து இப்படியெல்லாம் நினைத்தபோது நகைவேழம்பருடைய மனத்தில் உணர்ச்சிகள் மாறி மாறிப் பொங்கின. சில விநாடிகள் எதற்காகவோ தான் ஆத்திரப்பட வேண்டும் போலவும், இன்னும் சில விநாடிகள் எந்த ஏமாற்றத்திற்காகவோ தான் வருத்தப்பட வேண்டும் போலவும் தோன்றியது அவருக்கு. கைத் தினவு தீர அந்த நிலவறையின் எல்லைக்குள் குவிந்து கிடக்கும் பொற்காசுகளை எல்லாம் வாரி இறைத்துவிட வேண்டும்போல, அவருடைய கைகளின் விரல்கள் துடித்தன. இப்படிச் சிறைப்பட்டதைப் போல நிலவறையில் அடைக்கப்பட்டு