நா. பார்த்தசாரதி
707
இறங்கி வந்ததனால்தான் நான் இவ்வளவும் செய்ய முடிந்தது. சுருக்கமாகச் சொன்னால் நீதான் இன்று என்னைக் காப்பாற்றியிருக்கிறாய்.”
“எங்களுக்காக நகைவேழம்பர் முத்துக்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தபோது நீங்கள் நிலவறையிலிருந்து ஓசைப்படாமல் வெளியேறுவதற்கு முன் நான் போகிறேன். நீங்களும் முத்துக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு தாமதமின்றி உடன் மேலே ஏறி வந்துவிடுங்கள் என்பதுபோல் எனக்குச் சைகை செய்தீர்களே; அப்போது தான் உங்கள் குறிப்பும் நோக்கமும் எனக்கு நன்றாகப் புரிந்தது அப்பா. நீங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக அப்போது அந்த மனிதரிடமிருந்து விலகித் தப்பிச் சென்றுவிட எண்ணுகிறீர்கள் என்று நான் ஒருவாறு அனுமானித்துத் தெரிந்துகொள்ள முடிந்தது. என்னோடு வந்திருந்த தோழிப் பெண்களையும், அம்மாவையும் இழுத்துக்கொண்டு நான் படியேறி மேலே திரும்பி வருகிறவரை எனக்கும் பயம்தான். நாங்கள் எல்லாரும் மேலே வந்து சேர்ந்தவுடன் கதவருகே காத்திருந்த நீங்கள் நிலவறையை மூடிய பின்புதான் எனக்கு நிம்மதியாக உயிர்ப்பு வந்தது அப்பா!”
“நிலவறைக்குள் நீங்கள் எல்லாரும் முத்துத் தேர்ந்தெடுக்க நுழைகிறவரை அங்கே எனக்கு உயிர்ப்பே இல்லை வானவல்லி! நான் எதையோ நினைத்து அந்தக் குருடனை நிலவறைக்குள் அழைத்துக்கொண்டு சென்றேன். கடைசியில் அது வேறுவிதமாக மாறி என் உயிரையே நான் இழக்கும்படி நேரும்போல ஆகிவிட்டது. இத்தகைய சந்தர்ப்பங்களில் அவனுடைய கோபத்தை அவன் இழக்கும்படி செய்ய வேண்டுமானால் அதைவிட அதிக மதிப்புள்ளவற்றையும் நான் அவனுக்காக இழந்துவிடத் துணிவதுபோல அவனுக்கு எதிரே ஒரு போக்குக் காட்ட வேண்டும். அவன் ஆத்திரப்படும்போது எல்லாம் நான் இப்படிப் போக்குக் காட்டித்தான். அவனுடைய ஆத்திரத்தைத் தனித்துப்