பக்கம்:மணி பல்லவம் 5.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

882

மணிபல்லவம்

காரணமில்லையே?’ என்று தனக்குள் விரைந்து எழும் எண்ணங்களோடும், அந்த எண்ணங்களின் மாறுபட்ட சாயல்கள் சிறிதும் தெரியாத முகத்தோடும் நின்றார் பெருநிதிச் செல்வர். அப்படி நின்றபோது அவருடைய செவிகளில் மறுபடியும் நியாயத்தின் குரலாய் இளங்குமரனுடைய பேச்சு எதிரேயிருந்து ஒலிக்கத் தொடங்கியது.

“இதோ இந்த ஓவியங்களையும் பாருங்கள். இவர்களையெல்லாம் உங்களுக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன். நினைவில்லாவிட்டால் நினைவுபடுத்துவதற்காகவே நான் வந்திருக்கிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியபடியே தன் தந்தை அமுதசாகரருடைய ஓவியத்தையும், தாய்மாமனான காலாந்தக தேவருடைய ஓவியத்தையும் அவர் முன்பு காட்டினான் இளங்குமரன்.

அந்த விநாடி வரை அவன் முகத்தில் சிரிப்புக் குன்றவில்லை. ஆனால் எதிரே நின்றுகொண்டு அவற்றையெல்லாம் பார்க்கும்போது அவருக்கோ பதில் பேச நா எழாமல் உள்ளேயே கட்டுண்டு அடங்கிப் போய்விட்டாற் போலிருந்தது. நகைவேழம்பருடைய சாவுக்குப் பின்பு அருவாள மறவனும், அவனுடைய தோழனும் தன்னைப் புறக்கணித்துவிட்டுச் சென்றதிலிருந்து உலகமே தனக்கு முன் இருண்டு போய் அவநம்பிக்கைகள் சூழ்வதுபோல் பிரமை கொண்டு தளர்ந்து படுத்த படுக்கையாகியிருந்தார் அவர். இவ்வளவு காலம் கொடுமைகளும், சூழ்ச்சியும் செய்வதற்குக் காரணமாகத் தன் மனத்தில் இறுகிப் போயிருந்த உணர்வுகள் இப்போது எதற்கோ உடைந்து தளர்ந்து விட்டாற்போல அவருக்கே அச்சமாக இருந்தது. ஏதோ ஒரு வழியில் ஏதோ ஒரு காரணத்துடன் மூச்சு இரைக்கும்படி ஓடத்தொடங்கிய கால்கள் அந்த முடிவு தெரியாத வழியின் மேல் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றவுடன் நெஞ்சுத் துடிப்பின் வேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத தளர்ச்சியாலோ, இனிமேலும் ஒரு முடிவும் தெரியாத இந்த வழியில் தொடர்ந்து எதற்காகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/100&oldid=1231829" இலிருந்து மீள்விக்கப்பட்டது