பக்கம்:மணி பல்லவம் 5.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

883

போவது என்று மலைப்பதனாலோ அப்படியே சோர்ந்து நின்றுவிடுவதைப் போன்று தமது பயங்கரமான வாழ்க்கையில் மேலே என்ன செய்வதெனத் தோன்ற முடியாத மலைப்போடு வழி தெரியாமல் இன்று மயங்கி நின்றார் பெருநிதிச் செல்வர்.

‘இன்று இந்த முன்னிரவுப் போதில் இளங்குமரன் எனக்கு முன்பு இப்படிச் சிரித்துக்கொண்டே வந்து நிற்பதற்குப் பதில் ஆறாத சினத்துடன் உருவிய வாளும் கையுமாக என் எதிரியாக வந்திருந்தால்கூட நான் பயமின்றி நிமிர்ந்து நின்றிருப்பேன். இப்படிச் சிரித்துச் சிரித்து இந்தப் பொறுமையையும் நிதானத்தையுமே ஆயுதங்களாகக் கொண்டு என்னைக் கொல்கிறானே இந்தப் பிள்ளை ?’ என்று எண்ணி, அந்தப் பொறுமையாலும், நிதானத்தாலும் கூடத் தாக்கப்பட்டவராய்த் தளர்ந்து போய் நின்றார் அவர்.

தனக்கு முன்னால் அவருடைய தொடர்ந்த மெளனத்தையும் திகைப்பையும் கண்டு உணர்ந்த இளங்குமரன் தன் வசமிருந்த ஓவியங்களையும் சுவடிகளையும் ஒரு புறமாக வைத்துவிட்டு இன்னும் அருகில் நெருங்கிச் சென்று அவரோடு பேசினான்.

“ஐயா! நீங்கள் ஏன் இப்படி வாய்திறந்து மறுமொழி கூறாமல் எனக்கு முன் திகைத்து நிற்கிறீர்கள்? நான் ஏழை. என் கைகளில் இப்போது ஆயுதங்கள் இல்லை. மனத்தில் கோபமும் இல்லை. என் குடும்பத்தின் இணையற்றதொரு தலைமுறையைச் சேர்ந்த முன்னோர்களின் உயிர்களையும், செல்வங்களையும், நம்பிக்கைகளையும், நீங்கள் அழித்து நிர்மூலமாக்கியிருக்கிறீர்கள். அப்படியிருந்தும் உங்களை மலர்ந்த முகத்தோடும், சிரித்த வாயோடும் சந்திக்க வேண்டுமென்றுதான் ஆசையாயிருக்கிறது எனக்கு. இந்த மாளிகைக்குள்ளே இன்று நான் நுழையும்போது உங்கள் காவலாளிகள் நீங்கள் நோயுற்றுப் படுத்தபடுக்கையாயிருப்பதாகக் கூறினார்கள், உங்களுக்கு வந்திருக்கும் நோய் எதுவோ அதற்காகவும் நான் அநுதாபப்படுகிறேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/101&oldid=1231830" இலிருந்து மீள்விக்கப்பட்டது