பக்கம்:மணி பல்லவம் 5.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

888

மணிபல்லவம்

முன்னால் உங்களைவிட நிம்மதியோடும், நிதானத்தோடும் சிரித்துக்கொண்டு நிற்க முடிகிறது. நீங்களோ இவ்வளவு பெரிய மாளிகையில் எவ்வளவு என்று கணித்துச் சொல்ல முடியாத அவ்வளவு செல்வத்தைச் சேர்த்து ஆண்டு கொண்டிருந்தும், இப்போது எனக்கு முன்னால் நிம்மதியும் நிதானமும் இழந்து தோன்றுகிறீர்கள். உங்களைப் பார்த்து நான் கோபப்பட ஒன்றுமில்லை. ஆனால் இரக்கப்படுவதற்கும் கருணை கொள்வதற்கும் உங்களிடம் நிறையப் பலவீனங்கள் இருக்கின்றன...” என்று சொல்லிக்கொண்டே வந்த இளங்குமரனை மேலே பேச விடாமல் செய்யும் ஆத்திரத்தோடு துள்ளி எழுந்து பின்னால் பிடித்துத் தள்ளிவிட முயன்றார் பெருநிதிச் செல்வர். அவருடைய கைகள் அவனை நோக்கி மேலெழுந்து ஓங்கின.

ஆனால் அவர் அப்படிச் செய்வதற்கு ஆத்திரத்தோடு கைகளை ஓங்கிக் கொண்டு நின்றபோது அந்தக் கைகள் இரண்டும் அதே நிலையில் மரத்துப்போனாற்போல் தயங்கிவிட, அவர் செயலிழக்கும்படிச் செய்யவல்ல கம்பீர ஆகிருதி ஒன்று அந்தக் கூடத்துக்குள் புயல் புகுந்தது போலப் பிரவேசித்தது.

“நிறுத்து! இளங்குமரனுக்கு இந்த மாளிகையில் ஏதாவது நேர்ந்தால் உன்னுடை குலத்தையே பூண்டோடு அழித்துவிடுவேன். இந்தப் பெரிய நகரத்தையே என் கைகளால் ஆட்டிப் படைக்கிற வலிமை இருந்தும், நான் இவ்வளவு காலமாக எதற்கும் வைரம் கொண்டு குமுறியதில்லை. என்னைப் போன்றவர்களின் கோபத்திற்கு எவ்வளவு சக்தி உண்டு என்று நானே நிரூபித்துக் காட்ட வேண்டிய காலம் வந்து விட்டது போலிருக்கிறது” என்று எரிமலையாகக் கொதித்து பேசும் சொற்களோடு நீலநாக மறவர் மணிமார்பன் பின் தொடர அங்கு வந்து நின்றார்.

சோழநாட்டிலேயே பெரிய வீரராகிய நீலநாகர் அங்கு வந்து நின்றதைக் கண்டபோது பெருநிதிச் செல்வரின் உணர்வுகள் ஒடுங்கின. கண்களுக்கு முன்னால் உலகம் இன்னும் அதிகமாக இருண்டு போவதுபோல் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/106&oldid=1231835" இலிருந்து மீள்விக்கப்பட்டது