பக்கம்:மணி பல்லவம் 5.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

890

மணிபல்லவம்

உணர்ந்தபோது அவருக்கு மிகவும் நாணமாயிருந்தது. அப்போது இளங்குமரனுக்கு அவர் கூறிய மறுமொழிச் சொற்கள் ஒலி குன்றித் தன் தவற்றைத் தானே அங்கீகரித்துக் கொண்டது போன்ற தொனியோடு வெளிப்பட்டன.

“தம்பீ! என்னைப் பொறுத்துக்கொள். நான் உனக்குத் துணையாயிருக்க வேண்டுமென்ற ஆவலோடு இங்கு வந்ததை நீ இப்படி உன் பெருமைக்குக் குறைவாக நினைப்பதாயிருந்தால் என்னைப் பொறுத்துக்கொள். பிறர்மேல் நமக்குள்ள மிகுதியான வெறுப்பினால் சில வேளைகளில் தாம் தவறு செய்து விடுவதைப் போலவே, பிறர்மேல் நமக்குள்ள அதிகமான அன்பினால் சில தவறுகளைச் செய்துவிடுகிறோம். உன் மேலுள்ள அன்பின் மிகுதியால் உனக்கு இங்கே என்னென்ன கெடுதல் நேருமோ என்று எண்ணிக்கொண்டு நான் பின் தொடர்ந்தேன். மேலும் எந்தவிதமான ஆயுதமும் இல்லாமல் பசித்துத் தளர்ந்த உடம்பும் உணர்வுகள் நெகிழ்ந்த மனமுமாக நீ இங்கே புறப்பட்டதாக மணிமார்பன் என்னிடம் வந்து கூறினான். அவன் என்னிடம் வந்து கூறிய சூழ்நிலையும் என்னை ஆத்திரமடையச் செய்துவிட்டது.”

“உங்களுடைய அன்புக்கும் பாசத்திற்கும் நான் நிறைந்த நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தப் பெருமாளிகைச் செல்வரை வெற்றி கொள்வதற்கு நான் ஆயுதங்களோடு வரவில்லையே என்று நீங்கள் கவலைப்பட்டு எனக்குத் துணையாக என்னைப் பின் தொடர்ந்திருக்க வேண்டியதில்லை. எனக்கு நான் இவரிடம் பேச முடிந்த சொற்களைவிடப் பெரிய ஆயுதங்கள் வேறு எவையும் இருக்க முடியாது. என்னை எதிர்ப்பதற்கு என் சொற்களைவிடப் பெரிய வேறு ஆயுதங்கள் எவையும் இவரிடம் இருக்க முடியாது.”

“உயிரை அழிப்பதில் சொற்களைக் காட்டிலும் விரைந்து முயலும் இயல்பு ஆயுதங்களுக்கு இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம் தம்பீ.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/108&oldid=1231838" இலிருந்து மீள்விக்கப்பட்டது