பக்கம்:மணி பல்லவம் 5.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

891

"ஒப்புக் கொள்கிறேன். ஆனால் என் நாவிலிருந்து பிறக்கும் நியாயமான சொற்களுக்கு மறுமொழி சொல்ல முடியாதவரை இவர் எனக்குத் தோற்றுப் போய்க் கொண்டிருப்பதாகத்தான் அர்த்தம். இவர் வேண்டுமானால் என் உடம்பை அழிக்கலாம். ஆனால் அப்படி அழித்தோம் என்ற நினைவைத் தன் மனத்திலிருந்து என்றுமே இவரால் அழிக்க முடியாது. இந்த நிலையில் நீங்கள் எனக்குச் செய்யும் பெரிய துணை என்னை இவரோடு தனியே விடுவதுதான். இவரை என்னுடைய எதிரி என்று நான் நினைக்கவில்லை. என் வாழ்க்கையிலேயே நான் இதுவரை அநுதாபம் கொள்ள நேர்ந்தவர்களையெல்லாம்விட அதிகமாக அநுதாபம் கொள்ளுவதற்கு உரியவர் இவர் என்றுதான் எண்ணுகிறேன். என்னுடைய இந்தப் பரந்த அதுதாபத்தைச் சான்றாண்மை எனக்குத் தந்திருக்கிறது. இதை இவர்மேல் நான் செலுத்த முடிவதற்குத் தடையாக உங்கள் வரவு எனக்குத் தோன்றுகிறது.”

“என்னை மன்னித்துவிடு. நான் இங்கே உனக்கு அத்தகைய தடையாக நிற்க விரும்பவில்லை” என்று கூறி விட்டு மறுபடியும் இளங்குமரனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதற்குக் கூசியவராக மணிமார்பனையும் கைப்பற்றி இழுத்துக்கொண்டு நீலநாகர் அங்கிருந்து வேகமாக வெளியேறினார். எவ்வளவு ஆவேசமாகவும் ஆத்திரமாகவும் அவர் அந்த மாளிகைக்குள் நுழைந்தாரோ அவ்வளவிற்குத் தளர்ந்து துவண்டு குனிந்த தலையோடு திரும்பிச் சென்றுகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியால் தன் தந்தைக்குச் சமமான அந்தப் பெருவீரரின் மனம் புண்பட்டிருக்குமோ என்று உள்ளூர வருந்தினாலும் அப்பொழுது தான் நிற்கும் சூழ்நிலையில் இதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை என்று மனத்தைத் தேற்றிக்கொண்டவனாகத் தான் எதிர்க்க விரும்பாத தன் எதிரியின் பக்கம் பார்த்தான் இளங்குமரன். முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக்கொண்டு நின்றிருந்தார் பெருநிதிச்செல்வர். இளங்குமரன் சிரித்துக்கொண்டே நிதானம் மாறாத குரலில் அவரைக் கேட்டான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/109&oldid=1231839" இலிருந்து மீள்விக்கப்பட்டது