பக்கம்:மணி பல்லவம் 5.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

793

தாக வரும் பற்றுப் பாசங்களைக்கூட வென்று நிற்க வேண்டுமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள். சில சமயங்களில் ஞானத்தின் பலமிருந்தும் அத்தகைய துக்கங்களை வெல்ல முடியாமல் நாமே இருண்டு போய்க் கண்கலங்கி மலைத்து மேலே நடக்க முடியாமல் நின்று விடுகிறோம்...”

இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது இளங்குமரனும் தான் நடப்பதை நிறுத்திக் கொண்டு கண் கலங்கிப் போய் இருந்தான். அவனுடைய சொற்கள் நலிந்து உணர்ச்சி வசப்பட்டிருந்தன. அவன்மேல் நிறைந்த அநுதாபத்தோடு அருகில் சென்று தழுவிக் கொண்டார் வளநாடுடையார்.

“எவ்வளவு பெரிய ஞானியாயிருந்தாலும் நெகிழ்ந்த உணர்ச்சிகளை எதிரெதிரே சந்திப்பது இயலாத காரியம் தம்பி. மனைவி தூங்கும்போது எழுந்து வெளியேறி உலகத்திற்குத் துக்க நிவாரணம் காண வந்த புத்தனும், காதற் கிழத்தி காட்டில் உறங்கும்போது எழுந்திருந்து ஒடிப்போன நளனும் உணர்ச்சிகளை எதிரே சந்திப்பதற்குப் பயந்து கொண்டுதானே அப்படிப் புறப்பட்டிருக்க வேண்டும்?” என்று அவர் கூறியதை அவன் ஏற்றுக் கொண்டானா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் அருட்செல்வ முனிவருடைய ஞாபகமே அவனைக் கண்கலங்கச் செய்திருக்கிறது என்று தெரிந்தது.

அந்தக் கலக்கத்தையே வாயிலாகப் பயன்படுத்திக் கொண்டு தன் மனத்தில் இருப்பதை அவனுக்குச் சொல்லிவிட எண்ணினார் வளநாடுடையார்.

“இழந்த பொருள்களைத் திரும்பப் பெறுவதே இன்பமானால் இழந்த உயிரையே திரும்பப் பெறுவது இணை கூற முடியாத பேரின்பமாக அல்லவா இருக்கும்?” என்று கூறிவிட்டு அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கினார் அவர். அதில் தவிப்பும் ஏக்கமும், தெரிவதற்குப் பயந்து கொண்டே தெரிவதுபோல, மெல்லத் தெரிந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/11&oldid=1231752" இலிருந்து மீள்விக்கப்பட்டது