பக்கம்:மணி பல்லவம் 5.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

893

தகுதியற்றவன். நீ என்மேல் அநுதாபம் செலுத்துவது உண்மையானால் எனக்கு ஒர் உதவி செய். இந்த உதவியைத் தவிர வேறு எதையும் இனிமேல் நீ எனக்குச் செய்ய முடியாது.”

“சொல்லுங்கள், உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்?”

“பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். என்னுடைய செல்வமும், பீடும் போய்விட்டால் இந்தப் பெரிய நகரத்தில் அரசனிலிருந்து ஆண்டிவரை என்னை யாரும் மதிக்கமாட்டார்கள். ஏனென்றால் செல்வம் ஒன்றைத் தவிர என்னை மதிப்பதற்குரிய வேறு நிலையான காரணங்களை நான் பெறவில்லை. இந்தச் செல்வங்கள் என்னை விட்டுப் போகும்போது நானும் உலகத்தை விட்டுப் போய்விட வேண்டும். இனிமேல் நான் வாழக்கூடாது. நல்ல நண்பர்களும், நல்ல குணங்களும் இருந்திருந்தால் நான் இப்படியெல்லாம் கெட்டுப் போயிருக்க மாட்டேன். இவ்வளவு பாவங்களுக்கு அதிபதியாகவும் ஆகியிருக்கமாட்டேன். பூர்வ புண்ணியம் உள்ளவர்களுக்குத்தான் நல்ல குணங்களும் நல்ல நண்பர்களும் வாய்ப்பார்கள் போல் இருக்கிறது. எனக்கு அவையெல்லாம் கொடுத்து வைக்கவில்லை. நான் பிறவியிலேயே கெட்டவன். உன் தாயின் அழகை அடைய முடியாமல் ஏமாற்றம் அடைந்த போது அந்தச் சிறிய ஏமாற்றத்தைக்கூடத் தாங்கிக்கொள்ள இயலாமல் மேலும் கெட்டவனாக மாறினேன். சுற்றியிருந்தவர்கள் என்னைக் கொடிய வழியிலேயே தூண்டி விட்டு விட்டார்கள். இனி நான் மாற முடியாது. ஆனால் சாக முடியும்.

என்னைத் துடிக்கத் துடிக்கக் கொன்று பழிவாங்க வேண்டிய நீயோ என் முன்னால் வந்து சிரித்துக் கொண்டு நிற்கிறாய். என்மேல்கூட அநுதாபப்படுவதாகச் சொல்கிறாய். என்னுடைய இந்தச் செல்வங்கள் உனக்குப் பெரியவையாகத் தோன்றவில்லை. நீ உன் மனத்தையே செல்வமாக வளர்த்துக் கொண்டிருக்கிறாய். இருப்பினும் நீ ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/111&oldid=1231841" இலிருந்து மீள்விக்கப்பட்டது