பக்கம்:மணி பல்லவம் 5.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

894

மணிபல்லவம்

செய்ய வேண்டும். என்னைக் கொன்றுவிட்டு இந்தச் செல்வங்களையெல்லாம், உனக்குரியவையாக்கிக் கொண்டு நீ வாழவேண்டும். நானே என்னைக் கொன்று கொள்ள முடியும். ஆனால் அதற்கும் எனக்கு உறுதியான மனம் வாய்க்கவில்லை. உன்னுடைய பரிசுத்தமான கண்பார்வை, சத்தியமான சொற்கள், எதிரியையும் வசப்படுத்திவிடும் புன்னகை இவற்றாலேயே நீ என்னை முக்கால் பகுதி கொன்றுவிட்டாய். மீதமிருக்கும் கால் பகுதியையும் உன் கைகளாலேயே நீ அழித்துவிடு! கடைசி வேளையில் நான் மனம் மாறி உனக்குத் தோற்றுப் போக ஆசைப்படுகிறேன். உன்னைப் போன்று தூய்மையான மனம் உள்ளவன் என்னை வெற்றி கொள்ள அநுமதித்து நான் தோற்பத னால், வருகிற பிறவியிலாவது எனக்குப் புண்ணியம் வாய்க்கும். இதோ நீ என்னைக் கொன்று கொள். என்னை வென்றுகொள்” என்று கதறிக் கொண்டே பொறியற்ற பாவைபோல் தளர்ந்து அவனுக்கு முன் முழந்தாள்களை மண்டியிட்டுக் கொண்டு அமர்ந்தார் அவர்.

அவருடைய சொற்களைக் கேட்டு இளங்குமரன் கைகட்டி நின்றுகொண்டு நகைத்தான். அவர் நிலையைக் கண்டு பரிதாபமாயிருந்தது அவனுக்கு. இந்த மாறுதலை வியந்துகொண்டே அவருக்கு மறுமொழி கூறினான் அவன்.

“ஐயா! பிறரை வென்றுவிட வேண்டும் என்ற ஆசை கூடத் துறவிக்கு இருக்கக்கூடாது. வெற்றிக்கும் ஆசைப் படாத மனம்தான் துறவியின் செல்வம். அந்தச் செல்வம் தோல்வியினாலும் குறையாது. உங்கள் மனத்தில் இவ்வளவு காலமாக இப்படிக் கொடுமை செய்து வாழக் காரணமாக நின்ற பலம் எது என்று பரிசோதனை செய்து பார்க்க மட்டும்தான் நான் விரும்பினேன். உங்களை வெல்லவும், கொல்லவும் நான் விரும்பவில்லை. வெற்றியைக்கூட என்னால் விட்டுக் கொடுக்க முடியும். அப்படிப் பலமுறை என் வாழ்வில் நேர்ந்திருக்கிறது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/112&oldid=1231842" இலிருந்து மீள்விக்கப்பட்டது