பக்கம்:மணி பல்லவம் 5.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

898

மணிபல்லவம்

கொண்டுதான் இத்தனை காலமாக அவள் வாழ்ந்திருக்கிறாள்.

ஒவ்வொன்றாய்த் தளர்ந்துகொண்டிருந்த தன் நம்பிக்கைகளை விட்டு விடாமல் இளங்குமரனுடைய பாதங்களுக்கு முன் பூமாலை சரிவதுபோல் முழந்தாளிட்டு அமர்ந்து கொண்டு அவள் பேசலானாள்:

“இப்போது இந்த உணர்ச்சிமயமான வேளையில் உங்கள் பாதங்களில் இடுவதற்கு வேறு பூக்கள் என்னிடம் இல்லை. என் உயிரையே பூவாகக் கருதிக் கொண்டு உங்கள் பாதங்களில் அர்ப்பணம் செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. உங்களோடு இணைந்துவிடும் ஒரே இலட்சியத்திறக்காகத்தான் இந்த உயிரும் இதன் நினைவுகளும் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. உங்களோடு இணைவதற்கு முடியாத உயிர் வாழ்க்கை எனக்கு இனி வேண்டியதில்லை. என்னுடைய இந்த உயிரைப் போக்கிக் கொள்ளுமுன் மனத்தில் இந்தக் கணத்தில் தவிக்கிற தவிப்பு ஒன்றை உங்களிடம் வெளிப் படையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டுவிட வேண்டும்.”

அவளுடைய தவிப்பு, கண்ணீர், வேதனை எல்லாவற்றையும் கண்டு தயங்கி நின்றான் இளங்குமரன். முதல் முதலாக இந்தப் பெண்ணிடமிருந்து ஓவியன் மணிமார்பன் மடல் கொண்டு வந்தபோதும், கப்பல் கரப்புத் தீவில் நெகிழ்ந்த உணர்ச்சிகளோடு இவள் நெருங்கி நின்றபோதும் தன் மனத்தில் தாழம்பூ மணம் பரப்பிய வேளைகளை நினைத்துக் கொண்டான். தன்னையே அந்தப் பெண்ணுக்கு ஆளக் கொடுப்பதைத் தவிர வேறு எந்த மருந்தினாலும் தணிக்க முடியாத அவள் வேதனையைக் கண்டு அவன் மனமும் அனுதாபப்பட்டது. ஆனால் இத்தனை காலம் வளர்த்த மனத்தை ஒரு பெண்ணின் அழகுக்கு விட்டுக் கொடுப்பதா என்று ஒர் எண்ணம் தயங்கியது. தடுத்தது. அவனுள்ளே இப்படி இந்த மனப்போராட்டம் நடந்து கொண்டிருந்த போது அவள் அவனைக் கேட்டாள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/116&oldid=1231845" இலிருந்து மீள்விக்கப்பட்டது