பக்கம்:மணி பல்லவம் 5.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

899

"உங்களைச் சந்தித்த நாளிலிருந்து, நான் உங்களுக்காகச் சிறிது சிறிதாகத் தோற்றுப்போய்க் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்களா?”

“இருக்கலாம். ஆனால் உன்னை வெற்றிகொள்ள முயன்றதாகவோ வென்றதாகவோ எனக்கு நினைவில்லையே!”

“இது ஒரு விசித்திரமான தோல்வி! இந்தத் தோல்வியை எப்படி நிரூபிப்பதென்று எனக்குத் தெரியவில்லை. நான் பெண், பேதைத் தன்மை நீங்காதவள். அநுதாபத்திற்குரியவள். பிறர்மேல் அநுதாபப்படும் மனம்தான் பெரிய செல்வம் என்று நீண்ட நாட்களுக்கு முன்பு நாளங்காடிக் கூட்டத்தில் அந்தத் தொழுநோய் முதியவளைக் காப்பாற்றும்போது நீங்களே கூறினர்களே, அந்த விதமான அநுதாபத்திற்கு நான் மட்டும் பாத்திரமாக முடியாதவளா? நானும் ஒரு நோயாளிதான். எனக்கு வந்திருக்கிற நோய்க்குப் பெயர் ஆசை, வேட்கை, காதல் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். இந்த நோய்க்கு மருந்தாவதற்குக் கூசிக்கொண்டு நீங்கள் மேலே நடந்து போகத்தான் விரும்புகிறீர்களானால், உங்களைத் தடுக்கும் ஆற்றல் எனக்கில்லை. ஆனால் இந்தக் கடைசி விநாடியிலும் நான் துணிவாக இன்னொரு காரியம் செய்ய முடியும். வேறொரு விதத்தில் முயன்று உங்கள் அநுதாபத்திற்கு நானும் பாத்திரம்தான் என்பதை நிரூபிக்க முடியும்!” -

“அது எப்படியோ?”

“சொல்கிறேன், உலகத்தில் மிகவும் துன்பமான முயற்சி நம்மிடம் அன்பு செலுத்தாதவர்மேல் நாம் உயிரையே வைத்து அன்பு செய்து தவிப்பதுதான். நீங்கள் அந்தக் கூடத்தில் என் தந்தையோடு பேசிக்கொண்டிருந்தவற்றையெல்லாம் கதவோரமாக ஒதுங்கி நின்று நானும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். இறுதியாக நீங்கள் அவரிடம் சொல்லிய வார்த்தைகளை மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். யாரை அதிகமாக வெறுக்கிறோமோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/117&oldid=1231846" இலிருந்து மீள்விக்கப்பட்டது