பக்கம்:மணி பல்லவம் 5.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

901

ஒருவருடைய வழியை மற்றொருவர் மறித்துக்கொண்டு எவ்வளவு நேரம் தவிக்க முடியும்? இந்தத் தவிப்புக்கு முடிவு இருவருக்குமே தெரிய வேண்டும். அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது பெண்ணே! நீ எதைக் கேட்க வந்தாயோ. அதையே பொருளாகக் கொண்டு என்னிடம் வாதத்தைத் தொடங்கு. பல்லூழி காலத்துக்கு முன்பு ஆயிரம் பிரம்ம ஞானிகள் கூடியிருந்த பெருஞ்சபையில் ஞானமலையாகிய யாக்ஞவல்கியரைத் தன்னோடு பிரம்ம வாதம் புரிய முன்வருமாறு கார்க்கி என்ற பெண்மணி தனியாய் நின்று அழைத்திருக்கிறாள். அப்படி நீயும் என்னை அழைக்க முடியும்.”

“ஐயா! நீங்கள் என்னை ஏளனம் செய்கிறீர்கள் போலும். வெறுங்கையோடு வந்திருக்கிற எதிரியை வாட் போருக்கு வா என்றழைப்பது போலிருக்கிறது உங்கள் செயல். மைத்திரேயி, கார்க்கி போன்ற வேத காலத்துப் பெண்கள் எங்கே? பேதைத் தன்மையைத் தவிர வேறொன்றும் தெரியாத நான் எங்கே? எனக்கு அவ்வளவு அறிவு வலிமை இருந்தால் உங்கள்மேல் வைத்த மனத்தை மீட்டுக் கொண்டு நான் துறவியாகப் போய்விட முடியும். ஆனால் இப்போதுள்ள நிலையில் நான் பெரும் பேதை, உங்களை அடைய முடியாவிட்டால் சாவதைத் தவிர வேறெதுவும் நோக்கமில்லாதவள்.”

“பேதைகள் கூடச் சில சமயங்களில் வெற்றி பெற முடியும். விதிமட்டும் நல்லதாக இருக்க வேண்டும்....”

“எதை வெற்றி பெற முடியுமென்கிறீர்கள்.”

“எதை விரும்புகிறார்களோ அதைத்தான். விரும்பியதை விரும்பியபடியே அடைவதைவிடப் பெரிய வெற்றி ஏதும் பேதைகளுக்கு இருக்க முடியாது.”

“அப்படியானால் உங்கள் மேல் ஆசைப்படுவதைத் தவிர வேறெதையும் கற்காத பேதையான என்னோடு வாதிடவும் நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?”

“மறுக்கவில்லை...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/119&oldid=1231848" இலிருந்து மீள்விக்கப்பட்டது