பக்கம்:மணி பல்லவம் 5.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

905

அழுகை பொங்கியது. இவ்வளவு காலம் தன் வைராக்கியத்துக்குத் துணை நின்ற விதி இன்று தன்னைக் கைவிடப் போவதை எண்ணி வேதனை கொண்டான் அவன். எந்தவிதத்தினாலும் தன்னை வெற்றி கொள்ளத் தகுதியில்லாத ஓர் எதிரிக்குத் தான் தோற்றுப் போய்விட்டதாக அவன் மனம் தவித்தது; தனக்குத்தானே நினைப்பும் துணையுமின்றித் தனியாய் அமைந்தது.

எல்லாப் பற்றுக்களையும் களைந்துவிட்டுத் தன் வழியில் விரைந்து நடக்கும்போது இன்று இந்த வேளையில் தன்னுடைய பாதங்களைச் சுற்றி வளைக்கும் பூங்கரங்களின் பற்றில் இருந்து மீள முடியாத விதத்தில் தான் சிறைப்பட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தான் அவன். தோல்வியின் தளர்ச்சியால் கலங்கும் மனத்தோடு மேலே இளங்குமரன் நிமிர்ந்துகொண்டு வானத்தைப் பார்த்தான். ‘நான் முற்றிலும் இருண்டு விடவில்லை’ என்பது போல நட்சத்திரங்கள் அங்குமிங்குமாக மின்னிக் கொண்டிருந்தன. அந்த வானத்தில் தோன்றும் மேகங்கள் மறுபயன் கருதாமல் உலகத்துக்கு மழையைக் கொடுத்துக் கொண்டிருப்பது அவனுக்கு நினைவு வந்தது. அதே வானில் பயன் கருதாமல் சூரிய சந்திரர்கள் மாறி மாறி ஒளியைப் கொடுப்பதும், வேற்றுமை ஏற்றத் தாழ்வுகளை பாராமல் காற்று வீசுவதும் ஆகிய உலகின் நிரந்தரமான தியாகங்களை நினைவு கூர்ந்தான் இளங்குமரன். ‘இவளுக்கு என் மனத்தையும் உடலையும் நான் தோற்பதா?’ என்று உள்ளே கலங்கும் கருத்தைத் திடப்படுத்திக் கொண்டு அவளுக்குத் தோற்றுப் போகவும் துணிந்தான் அவன். உயர்ந்த கொடையாளியின் பரந்த மனப்பக்குவத்தோடு அவள் கேட்டதற்கு மறுப்பின்றித் தன்னைக் கொடுத்துவிடவும் குழைந்தது அவன் கருத்து. தன் உடம்பையும், மனத்தையும் கூடக் கேட்கிறவளுக்கு மறுக்காமல் தியாகம் செய்துவிடத் துணிந்தான் அவன். ‘உடம்பும் மனமும் தூய்மையாய் நிறைந்த செல்வங்கள், அவற்றை யாருக்காகவும் இழக்கக் கூடாது’ என்று தன் வாழ்வில் கடைசியாகத் தான் சேர்க்க ஆசைப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/123&oldid=1231852" இலிருந்து மீள்விக்கப்பட்டது