பக்கம்:மணி பல்லவம் 5.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

908

மணிபல்லவம்

ருப்பதைவிட வேறெந்தப் பெருமையும் எனக்கு வேண்டாம். தலைமுறை தலைமுறையாகப் பெண்கள் அன்பினால் பிறருக்குத் தோற்றுப் போவதைத்தான் பாக்கியமாகக் கருதி வந்திருக்கிறார்கள். ஆண்களின் வாழ்வில் வேண்டுமானால் வெற்றியடையவதனால் பெருமை இருக்கலாம். பெண்னின் வாழ்க்கையில் அன்புக்காகத் தோற்றுக் கொண்டேயிருப்பதை விடப் பெரிய நிகழ்ச்சி வேறொன்றும் இல்லை. வாழ்க்கை முழுவதும் துணையாக்கிக் கொண்டு நடப்பதற்காக வளைகள் குலுங்கும் கையால் நாங்கள் எந்த ஆண்மகனின் கையைப் பற்றுகிறோமோ அந்த விநாடியிலிருந்து எங்கள் மனம் அவனுக்கு மட்டும் தோற்றுப் போவதில் சுகம் காணத் தொடங்கிவிடுகிறது. மலையிலிருந்து கீழே இறங்கும் அருவி அப்படித் தாழ்ந்து கீழே வீழ்வதனாலேதான் உல்லாசமடைகிறது. செடிகளில் அழகும் மணமும் நிறைந்த பூக்கள் சூடிக்கொள்வோர் காலடியில் உதிர்வதற்காகவே பூக்கின்றன. உதிர்ந்த பூ திரும்பவும் கிளைக்குப் போக ஆசைப்பட முடியுமோ? வீழ்ந்த அருவி மறுபடி தான் பிறந்து வந்த இடமான நீலமலைச் சிகரத்துக்கு ஏறிப் போக ஆசைப்பட முடியுமோ? பெண் தன்னை இழந்து விடுவதில்தான் சுகம் பெறுகிறாள்” என்று கூறியவாறே தன் வளைக் கரத்தால் அவன் கரத்தைப் பற்றினாள் சுரமஞ்சரி.

அவன் அவள் கையைத் தடுக்கவில்லை.

“நீ பெற வேண்டிய சுகங்களுக்காக உன் தெய்வத்தை மனமார வணங்கி வேண்டிக்கொள் சுரமஞ்சரி!”

“நேற்று வரை பல வேறு தெய்வங்களை நான் வணங்கியிருக்கிறேன். இன்று நான் வணங்குவதற்கு வேறு தெய்வங்கள் இல்லை. நீங்கள் ஒருவரே என் தெய்வமாகி விட்டீர்கள்.”

“உன்னுடைய தெய்வத்தை நீ எந்த வழியில் நடத்திக் கொண்டு போக வேண்டுமோ அந்த வழியில் நடத்திக் கொண்டு போ!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/126&oldid=1231855" இலிருந்து மீள்விக்கப்பட்டது