பக்கம்:மணி பல்லவம் 5.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

909

“கட்டளையே தவறானதாயிருக்கிறதே? தெய்வமல்லவா தன்னைச் சேர்ந்தவர்களை வழி நடத்திக் கொண்டு போக வேண்டும்? இன்னொரு நிகழ்ச்சியும் எனக்கு நினைவு வருகிறது ஓவியர் மணிமார்பனோடு நீங்கள் இந்த மாளிகையில் நுழைந்த முதல் நாள் ‘பிறருடைய வழிக்கு அடங்கி நடந்து நமக்குப் பழக்கமில்லை. எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் எப்படி நடந்து போக வேண்டுமென்று நமக்குத் தெரியும்’ என்று தணியாத தன்மான உணர்ச்சியுடனே என்னிடம் பேசினர்கள். அதே மனிதர்தானா இன்று இப்படி என் முன் எந்த வழியில் நடத்த வேண்டுமோ அந்த வழியில் என்னை நடத்திக் கொண்டு போ’ என்று கூறுகிறீர்கள். இந்த மாறுதலை என்னால் நம்பவே முடியவில்லையே?”

“ஓர் எல்லையின் கடைசிப் புள்ளியில் போய் நிற்பவர்கள் அங்கிருந்து திரும்பி நடந்தால் அதற்கு நேரேயுள்ள எதிர் எல்லைக்குத்தான் நடக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கடைசியாக ஏறிப்போய் நிற்கிற எல்லை எதுவோ அதற்கு அப்பால் போவதற்கும் நோக்கமாகக் கூறிக்கொள்வதற்கும் ஒன்றுமே இருப்பதில்லை. என்னுடைய எல்லையிலிருந்து நான் திரும்பி நடக்க வேண்டுமென்றுதானே நீ இந்தக் கையால் என்னைப் பற்றி இழுக்கிறாய்? “

அவனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டுச் சுரமஞ்சரி கண் கலங்கினாள். சில விநாடிகள் ஏதோ வேதனைக்குரிய சிந்தனைகளினால் மனம் வருந்துகிற சாயல் அவள் முகத்தில் தெரிந்தது. பின்பு தனக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாக அவன் கையைப் பற்றியிருந்த தன் வளைக்கரத்தை மெல்ல விடுவித்துக் கொண்டு “இப்படி உள்ளர்த்தம் நிறைந்த வார்த்தைகளால் என்னைக் கொல்லாதீர்கள். உங்கள் வழியில் நீங்கள் விரும்புகிறார் போல என்னை அழைத்துச் செல்லுங்கள். தோற்றவர்களை அழைத்துச் செல்லும் முறையை வென்றவர்கள் தானே முடிவு செய்ய வேண்டும்” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/127&oldid=1231856" இலிருந்து மீள்விக்கப்பட்டது