பக்கம்:மணி பல்லவம் 5.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

914

மணிபல்லவம்

"இந்த ஒருகை சோற்றில் என்னுடைய நெடுங் காலத்துப் பசி தணிந்துவிட்டது அன்பரே! என்னிடமிருந்து என் கையால் எதையுமே ஏற்றுக் கொள்ள மறுத்த நீங்கள் இன்று ஏற்றுக் கொண்டீர்கள். கொடுக்க வேண்டும் என்ற மெய்யான பரிவோடு எனக்கும் உங்கள் கையால் உண்ணக் கொடுத்தீர்கள். இந்த விநாடியோடு செத்துப் போய்விட்டாலும் இனி எனக்குக் கவலையில்லை. இந்த ஒரே ஒரு விநாடியில் ஆயிரம் ஊழிகள் உங்களோடு வாழ்ந்து அநுபவங்களைப் பெற்றுவிட்டாற் போன்ற திருப்தி எனக்குக் கிடைத்துவிட்டது” என்று மகிழ்ச்சி மிகுதியினால் சுரமஞ்சரியின் சொற்கள் முற்றாத மழலைச் சொற்களாய்க் குழைந்து ஒலித்தன.

“பேதைப் பெண்ணே! இப்போதுதான் நீ வாழத் தொடங்கியிருக்கிறாய். அதற்குள் ஏன் சாவதற்கு ஆசைப் படுகிறாய்?” என்று கேட்டுக்கொண்டே இளங்குமரன் தன்மேல் சாய்ந்திருந்த அவளுடைய குழற்கற்றையைப் பரிவோடு கோதினான்.

மேலே மரத்தின் கிளையிலிருந்து குயில் ஒன்று கூவியது.

காற்றில் ஆடியசைந்த மகிழ மரத்தின் கிளைகள் அவர்கள் மேல் பூக்களைச் சிந்தின.

“இந்தக் குயில் ஏன் இப்படிக் கூவுகிறது சுரமஞ்சரி?”

“விடிவதற்காக”

“யாருக்கு விடிவதற்காக?”

“ஒரு பேதைப் பெண்ணுடைய வாழ்க்கையில் விடிந்து ஒளி கிடைப்பதற்காகத்தான்!”

இந்தக் குறும்பு நிறைந்த பதில் வார்த்தைகளைக் கூறிவிட்டுத் தன் சிரிப்பைத் தானே அடக்கிக்கொள்ள முடியாமல் சுரமஞ்சரி சிரித்தபோது அவளுடைய சிரிப்பும் பிறந்து அதில் கலந்து எதிரொலித்து இணைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/132&oldid=1231862" இலிருந்து மீள்விக்கப்பட்டது