பக்கம்:மணி பல்லவம் 5.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

916

மணிபல்லவம்

தோளில் சரிந்த மல்லிகை மாலையாய் மணந்து கொண்டிருந்தது. சந்திர பிம்பமாய்த் தெரிந்த அவள் முகம் அந்த உறக்கத்திலும் ஏதோ நல்ல கனவு காண்பது போலச் சிரிப்பைக் காண்பித்துக் கொண்டிருந்தது. மனத்திலும், கண்களிலும் அவளுக்காகவே நிறைந்த பரிவோடு தனக்காக எல்லாச் சுகங்களையும் இழந்துவிட்டு எல்லாச் செல்வங்களையும் தோற்றுவிட்டு இப்படி இந்த மரத்தடியில் வந்து வெறுந்தரையில் உறங்கும் அந்தப் பேதையைப் பார்த்துக் கொண்டே வியந்தான் இளங்குமரன் அந்தப் பொன்னுடலில் வைகறைக் குளிர் படாமல் தன்னுடைய மேலாடையை எடுத்து மெல்லப் போர்த்தினான். ‘விரும்பியதை விரும்பியபடியே அடைவதைவிடப் பெரிய வெற்றி எதுவும் பேதையர்களுடைய வாழ்வில் இருக்க முடியாது’ என்று முதல்நாள் அவளைக் கடுமையாக வெறுத்துப் புறக்கணிப்போடு கூறியிருந்த தானே இப்போது இப்படி அவளைக் குழந்தைபோல் பேணிப் போற்றி உறங்கச் செய்வதையும், அவளுடைய உறக்கம் கலையலாகாதே என்று கவலைப்படுவதையும் எண்ணியபோது அவன் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான். அந்தத் தோல்வியை உணர்ந்தபோது அவனுக்கு வெட்கமாக இருந்தது. அதே சமயத்தில் சுகமாகவும் இருந்தது. பொழுது புலர்ந்தும் புலராமலும் இருந்த அந்த நேரத்தைப் போலவே அவன் மனமும் குளிர்ந்து மணந்து கொண்டிருந்தது. இப்படி ஒரு காலைப்போது அவன் வாழ்க்கையில் இதுவரை விடிந்ததில்லை.

‘என்னை அடைவதற்காக இவள் செய்த தவம் பெரியது! என்னைப் பெறுவதற்காக இவள் இழந்த சுகங்களும் செய்த தியாகமும் இணையற்றவை’ என்று தனக்குள் தானே சொல்லிக் கொண்டவனாகச் செந்தாமரைப் பூவைப்போல் தன் மார்பின்மேல் படர்ந்து பற்றிக் கொண்டிருந்த அவள் கையை மெல்ல எடுத்து இளங்குமரன் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். அந்தக் கையின் மென்மையும், தண்மையும், நளினமுமான நீண்ட {hws|விரல்|விரல்களும்}}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/134&oldid=1231864" இலிருந்து மீள்விக்கப்பட்டது