பக்கம்:மணி பல்லவம் 5.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

917

களும், பவழமல்லிகை மணப்பது போன்ற மயக்கமும் ஒருகணம் அவனுடைய நினைவிலிருந்து விலகின. அவனுள் ஓடும் இரத்தம் தன் குலப் பகைவரையும் அவர் கொடுமைகளையும் நினைவூட்டிற்று.

உயர்ந்த பாவனைகளால் அந்தத் தீய நினைவை அடக்கிக்கொண்டு பரிவுடனே மறுபடி அவளது கையை எடுத்து அவன் தன் கண்களில் ஒற்றிக் கொண்டபோது அவளே விழித்துக் கொண்டுவிட்டாள். அவனுக்கு வெட்கமாகிவிட்டது. வெட்கத்தோடு அவள் கையை மெல்ல விடுவித்தான் அவன். அவளோ அவன் விடுவித்த கையை அவனிடமிருந்து மீட்டுக்கொள்ளவே முயலாதவளாய் அந்த நிலையில் தான் விழிப்பதைவிட உறங்குவதே நல்லதென்று திருட்டுத் தீர்மானமும் செய்து கொண்டவளாகப் பொய் உறக்கம் உறங்கினாள். அதைப் புரிந்துகொண்டு அவன் புன்னகை பூத்தான்.

அவளுக்கு அந்த விளையாட்டைத் தொடரும் ஆசையிருந்தும் தொடர முடியாத சூழ்நிலையில் அடக்க முடியாத சிரிப்போடு எழுந்து உட்கார்ந்தாள். “இந்தக் கை எந்தப் பிறவியிலோ சக்தி வாய்ந்த தேவதைகளின் கோவில்களுக்குப் பூச்சுமந்து பூச்சுமந்து புண்ணியம் சேர்த்திருக்க வேண்டும். அதன் பயன் சற்றுமுன் இதற்குக் கிடைத்துவிட்டது. இது பாக்கியம் செய்த கை” என்று சிவப்பு நிறம் படரும் கிழக்கு வானத்தைப் பார்த்துக் கொண்டே அவனுக்குச் சொன்னாள் சுரமஞ்சரி.

அவன் தொட்டு ஆண்ட நினைவின் சுகம் அவளுடைய கையிலும் மனத்திலும் நிறைந்திருப்பதை அவளுடைய வார்த்தைகள் பரிபூரணமாய்த் தொனித்துக் கொண்டு பேசின. முறுவல் கிளரும் முகத்தினனாய்த் தன் கைகள் நிறையக் கீழே உதிர்ந்திருந்த மகிழம் பூக்களை அள்ளிக் கொண்டு அவள் பக்கம் திரும்பிப் பாக்கியம் செய்த அந்தக் கையை மலர்த்தி அதில் நிறைத்தான் இளங்குமரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/135&oldid=1231865" இலிருந்து மீள்விக்கப்பட்டது