பக்கம்:மணி பல்லவம் 5.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

918

மணிபல்லவம்

இப்போதும் அவனுடைய கண்களின் பார்வையே அவளைப் புதுமணப் பெண்ணாக அலங்கரித்தது.

“புறப்படு! நீராடப் போகலாம். பொழுது நன்றாக விடிவதற்கு முன்பு காவிரியில் போய் நீராடிவிட்டு வர வேண்டும்” என்று எழுந்து நடந்தான் அவன்.

அவள் மெளனமாய் அவனைப் பின்தொடர்ந்தாள். எல்லாரும் எழுவதற்கு முன்பு நகரமே அந்தரங்கமாக எழுந்து நீராடி விட்டு இன்னும் ஈரம் புலராமல் இருப்பது போல் வீதிகளில் எங்கும் மென்குளிர் பரவியிருந்த அந்த வேளையில் நடந்துபோவதே சுகமாக இருந்தது.

புறவீதிக்கு அருகே இலவந்திகைச் சோலையின் மதிலை ஒட்டியிருக்கும் காவிரிப் படித்துறையில் போய் நீராடலாம் என்ற கருத்துடன் சுரமஞ்சரியை அழைத்துச் சென்றான் இளங்குமரன். புறவீதியில் நுழைந்ததும் பக்கத்திலிருந்த மலர் வனங்களின் மணமும் சேர்ந்து அவர்கள் நடந்துபோய்க் கொண்டிருந்த வழிநடைக்கு இங்கிதமான சூழலைப் படைத்தது.

“இப்படி ஒரு காலைப் போது என் வாழ்வில் இதுவரை விடிந்ததில்லை” என்று அவன் கண் விழித்ததும் தானாகவே எதை நினைத்தானோ அதை அந்த வீதியில் புகுந்தபோது சுரமஞ்சரியும் அவனிடம் கூறினாள்.

இதே போலப் பணி புலராத காலை வேளை ஒன்றில் இந்தக் காவிய நாயகனை அடைவதற்காகத் தான் விரதமிருந்து இருகாமத்திணையேரியில் நீராடிக் காமன் கோட்டத்தை வலம் வந்த நிகழ்ச்சியை இன்று நினைவு கூர்ந்தாள் அவள். அந்த நினைவு இன்று தன் வாழ்வில் கைகூடிவிட்டதை உணர்ந்த பெருமையோடு புதிய கிளர்ச்சி பெற்றவளாகப் புறவீதியில் புகுந்தபோது அவள் அவனுடைய கையைப் பற்றிக்கொண்டு அவன் அருகில் இன்னும் நெருக்கமாக நடக்கலானாள். அவளுடைய கையை அவனும் அப்போது விலக்கிவிட்டுத் தனியே நடக்க முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/136&oldid=1231866" இலிருந்து மீள்விக்கப்பட்டது