பக்கம்:மணி பல்லவம் 5.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

920

மணிபல்லவம்

இளங்குமரனுடைய நாவிலிருந்து மிகத் தெளிவாக ஒலித்த இந்த வார்த்தைகளைக் கேட்டு முல்லையின் கையில் இருந்த கோலப் பேழை கீழே நழுவி விழுந்து உடைந்தது. இளங்குமரன் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தான்.

“இதென்ன காரியம் செய்தாய் முல்லை? கோலப் பேழையைக் கீழே போட்டு உடைத்துவிட்டாயே?”

“ஆம், உடைத்துத்தான் விட்டேன்.”

“அரைகுறையாக நிறுத்தியிருக்கிற இந்தக் கோலத்தை இனி எப்படி முடிப்பாய்...”

“....”

“உனக்கு எப்போதுமே இந்தப் பரபரப்பும் பதற்றமும் கூடாது முல்லை.”

“....”

பதில் பேசாமல் தன் முகத்தையே பார்த்துக் கொண்டு சிலையாக நின்ற முல்லையின் கண்களில் நீர் பெருகி வருவதை இளங்குமரன் கண்டான். இப்படி நடக்கும் என்றுதான் அவன் எதிர்பார்த்தான். அவன் எதிர்பார்த்த படியே நடந்தது. ஏதோ கோபம் நிறைந்த பேச்சைப் பேசுவதற்குத் துடிப்பது போல் முல்லையின் செவ்விதழ்கள் துடித்தன. எதிரே நிற்கிற அவளுடைய முகம் உணர்ச்சிகளின் மயானமாகி அங்கே எந்த ஆசைகளோ எரிந்து அழிவதையும் அவன் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு கணம் பின்னால் திரும்பிப் பக்கத்தில் நின்ற சுரமஞ்சரியின் மேல் அவன் தன் பார்வையைப் படரவிட்டான். அவள் பயந்தாற்போல் அவன் முதுகுக்குப்பின் ஒண்டி நின்று கொள்ள முயன்று கொண்டிருந்தாள். மறுபடி அவள் முன் பக்கமாக முல்லையைத் திரும்பிப் பார்த்தபோது,

“ஒரு விநாடி நில்லுங்கள். இதோ வருகிறேன்” என்று அவனிடம் சொல்லிவிட்டு நடைப்பிணம் போலத் தளர்ந்து வீட்டின் உள்ளே சென்றாள் முல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/138&oldid=1231868" இலிருந்து மீள்விக்கப்பட்டது