பக்கம்:மணி பல்லவம் 5.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

797

போய்விடலாம். மேலும் இந்த மாளிகையில் நாங்கள் கவனிக்க வேண்டிய காரியங்களுக்கு எவ்வளவு போதாகும் என்று உறுதியும் சொல்ல முடியாது. கப்பல் தலைவன் இன்று மாலையே பக்கத்திலிருக்கும் மணிபல்லவத் தீவுக்குப் புறப்பட்டுவிட வேண்டுமென்று சொல்லியிருக்கிறான். நாங்கள் இருவரும் குலபதியின் இந்த மாளிகையிலிருந்து புறப்படுவதற்கு இரவு நடுயாமத்துக்கு மேலும் ஆனாலும் ஆகிவிடலாம். ஒருவேளை புத்த பூர்ணிமைக்காக மணிபல்லவத்துக்கே நாளைக்குக் காலையில் நாங்கள் புறப்பட்டு வந்து சேரும்படி ஆகலாம். நீயும் எங்களோடு காத்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நாங்கள் வருவதற்குத் தாமதமானாலும் நீ முன்னால் புறப்பட்டுப் போய்விடுவது நல்லது,” என்று தன்னிடம் வளநாடுடையார் சொல்லி வேண்டிக் கொண்டபோது ஓவியன் மணிமார்பனுக்கும் தான் அவ்வாறு செய்வதே நல்லதென்று தோன்றியது. மணிநாகபுரத்தின் அழகிய வீதிகளையும், காட்சிகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு அவனும் விடைபெற்றுக் கொண்டு தன் மனைவியோடு சென்றான்.

முதலில் மாளிகை மாடத்திலிருந்து கீழே இறங்கி வந்த குலபதியோடும் இளங்குமரனோடும் உள்ளே போகத் தொடங்கியிருந்த வளநாடுடையார் பின்னால் ஒவியனும் அவன் மனைவியும் வந்து கொண்டிருப்பதை நினைவு கூர்ந்தவராகத் தான் மட்டும் மறுபடி வீதிக்குத் திரும்பிச் சென்று இவ்வாறு அவர்களைத் தங்கள் குழுவிலிருந்து பிரித்து அனுப்பிவிட்டார். அவரது அந்தச் செய்கைக்காக இளங்குமரன் தனக்குள் வருந்தினான். எனினும், தனக்குப் புதியவனான குலபதி என்னும் இளைஞனை அருகில் வைத்துக் கொண்டு வளநாடுடையாரைக் கடிந்து பேசுவது நாகரிகமாயிராது என்று கருதி இளங்குமரன் தன் வருத்தத்தை மனத்துள்ளேயே புதைத்துக் கொண்டு விட்டான். மனிதர்களையும் அவர்களுடைய உணர்வுகளையும் சமமாகப் பாவித்து மதிக்கத் தெரியாதவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/15&oldid=1231757" இலிருந்து மீள்விக்கப்பட்டது