பக்கம்:மணி பல்லவம் 5.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

934

மணிபல்லவம்

மிட்டதை ஒப்பத் தற்செயலாக நடந்திருக்கின்றன. அந்தப் பெருமாளிகைச் செல்வருக்கும் உங்களுக்கும் உள்ள பகைமைகள் உங்களுக்கே நன்றாகத் தெரிந்த பின்பும் நீங்கள் இப்படி விட்டுக் கொடுத்துக் கருணை மறவராக நிற்பதுதான் இந்த வாழ்வுக்குக் காவியப் பெருமையைத் தருகிறது. ஆனால் நீலநாகரைப் போன்றவர்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.”

“அவர் இதை ஒப்புக்கொள்ளாததற்கும் அவருக்கு என் மேலுள்ள அன்புதான் காரணம் மணிமார்பா! அவர் ஒரு பெரிய மலைச்சிகரம். அதே உயரத்துக்கு நீ வேறு சிகரங்களைத் தேடக்கூடாது. எல்லா மனிதர்களுடைய மனத்தையும் அந்தச் சிகரத்தின் உயரத்தினால் அளக்கவும் முயலக்கூடாது. கருங்கல்லாய் இறுகிப் போயிருக்கும் அந்தச் சிகரத்தின் உச்சியிலிருந்துகூடப் பாசமும், அன்பும் ஊறிப் பெருகுவதுண்டு.”

“உண்மைதான் ஐயா! வயிற்றுப் பசியும் கவலைகளும் இல்லாத உலகம் ஒன்று ஏற்பட்டால் அங்கே அன்புதான் விலை மதிப்பற்ற செல்வமாக இருக்கும். மற்ற எல்லாச் செல்வங்களும் மதிப்பிழந்து போகும். மற்ற எல்லாச் செல்வங்களும் மதிப்போடு இருக்கிற காரணத்தால்தான் சில சமயங்களில் பசி, கவலை, குரோதங்களினால் அன்பைப் பற்றி மறந்து போகிறோம். இந்தப் பெரு மாளிகைச் சகோதரியாருடைய தந்தையும் அவரைச் சேர்ந்தவர்களும் இத்தனை காலம் குரோதத்தினால்தான் அன்பை மறந்து போயிருந்தார்கள் போல் இருக்கிறது. ஆனால் இப்போது உங்களருகே நாணி நிற்கும் இந்தச் சகோதரியார் தன் குடும்பத்தின் வரலாற்றையே மாற்றி விட்டுப் புது வழியில் உங்களோடு இறங்கி வந்துவிட்டார்” என்று கூறிக்கொண்டே நீராடுவதற்காக கீழே படிகளில் இறங்கினான் மணிமார்பன்.

அவனும் பதுமையும் நீராடிவிட்டு வருகிறவரை இளங்குமரனும் சுரமஞ்சரியும் கரையில் காத்திருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/152&oldid=1231882" இலிருந்து மீள்விக்கப்பட்டது