பக்கம்:மணி பல்லவம் 5.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

935

தன்னருகே நீராடிய ஈரம் புலராமல் மேகக் காடாய்ச் சரிந்த சுரமஞ்சரியின் கூந்தலிலிருந்து கிளரும் நறுமணங்களை உணர்ந்து இளங்குமரன் தன் கண்களால் அவளை நன்றாகப் பார்க்கத் தொடங்கியபோது, எல்லா அணிகலன்களையும் இழந்த பின்பும் பிறந்தபோதே உடன் பிறந்து, வளர்ந்தபோதே உடன் வளர்ந்து நிறைந்த இயற்கை வனப்புகளையே போதுமானவைகளாகக் கொண்டு பேரழகியாய் மணந்து கொண்டிருந்தாள் அவள். இவற்றில் தெரியும் அழகு மிகுதியா? நாணம் மிகுதியா?’ என்று பிரித்துக் காண முடியாத கவர்ச்சி நிறைந்த கண்கள், நான் கனிந்திருக்கிறேன்! நான் கனிந்திருக்கிறேன்’ என்பதைச் சொல்ல மொழியின்றித் துடிப்பதுபோல மெல்ல அசையும் செல்லச் செவ்விதழ்களின் நகைக் கனிவு வார்த்தைகளால் பேச முடியாததைப் பேசும் நளினமான சிரிப்புஇவ்வளவும் நிறைந்து தோன்றினாள் சுரமஞ்சரி. காலைக் கதிரொளியில் அவள் முகமும் கைகளும் பாதங்களும் மெருகிட்ட செம்பொன்னாகி மின்னின.

எத்தனை அழகுகள்! எத்தனை அழகுகள்! அத்தனை அழகுகளையும் புதிதாய் இன்றுதான் புரிந்துகொள்வது போல் அவளைப் பார்த்தான் இளங்குமரன்.

இப்போது மூன்றாவது முறையாகவும் அவனுடைய பார்வையே அவளைப் புதுமணப் பெண்ணாக அலங்கரிக்கத் தொடங்கியது.

“சுரமஞ்சரி ! உன்னுடைய நாணமே உனக்குப் பெரிய அணிகலன்.”

“அது உங்களுடைய பார்வையிலிருந்துதான் எனக்குக் கிடைக்கிறது. உங்கள் கண்களின் பார்வையாலேயே நான் அலங்கரிக்கப்படுகின்றேன்....”

“அப்படியானால் வேறுவிதமான அலங்காரங்களுக்கு நீ ஆசைப்படவில்லை போலும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/153&oldid=1231883" இலிருந்து மீள்விக்கப்பட்டது