பக்கம்:மணி பல்லவம் 5.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

936

மணிபல்லவம்

இந்தச் சொற்களைக் கேட்டு அவளுடைய இதழ்களில் அதுவரை சுரந்திருந்த நகை சற்றே மலர்ந்து புன்னகை யாய்ப் பிறந்தது. பின்பு பெருநகையாகவும் வளர்ந்தது. மெல்ல நெகிழ்ந்த பவழச் செவ்வாயில் பற்கள் முத்துக்களாய் ஒளி வீசின. விடிகாலையில் ஒவ்வோர் இதழாய் மலரும் பூவைப்போல் அவள் முகத்தில் உணர்ச்சிகள் மலர்ந்து கொண்டும் மணந்து கொண்டும் நின்றன. கன்னங்களில் குங்குமச் சிவப்பு பரவியது. கால் விரல் தரையைக் கிளைக்கலாயிற்று.

‘இன்று இந்த வேளையில் தன் முன் இப்படி நாணிக் குலைந்து நிற்கிற இதே பெண்தானா நேற்று அப்படியெல்லாம் ஆற்றல் வாய்ந்த சொற்களைத் தேடித் தனக்கு முன் வாதிட்டாள்?’ என்று எண்ணி வியந்தான் இளங்குமரன். அவள் அழகுகள் ஒவ்வொன்றும் இப்போதுதான் புரிந்த புதுமைகளாய் அவன் மனத்தில் நிறைந்தன.

மணிமார்பனும் அவன் மனைவியும் நீராடிவிட்டுக் கரைக்கு வந்தபின்பு எல்லாருமாக அங்கிருந்து ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலைக்குப் புறப்பட்டுப் போனார்கள். எல்லாரும் படைகலச் சாலைக்குள் நுழைகிறபோது சுரமஞ்சரி மட்டும் வாயிலிலேயே தயங்கி நின்றாள்.

முன்பு ஒருநாள் பின்னிரவு வேளையில் நகரமே உறங்கிக் கிடந்த பேரமைதியினிடையே வசந்தமாலையும் தானுமாகத் தேர் ஏறி வந்து இதே படைகலச் சாலையில் இளங்குமரனைத் தேடியபோது, வாயிற்கதவருகே நின்று தன்னைத் தடுத்த அந்த இரும்பு மனிதரை நினைத்துக் கொண்டு பயந்தாள் அவள்.

சுரமஞ்சரி மருண்டு போய்த் தயங்கி நிற்பதன் காரணம் இளங்குமரனுக்குப் புரிந்தது.

“பயப்படாமல் என்னோடு உள்ளே வா. உலகத்தில் எல்லாரும் அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்பட்டவர்கள் தாம். நீலநாகரும் அகற்கு விதிவிலக்கில்லை. நீ இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/154&oldid=1231884" இலிருந்து மீள்விக்கப்பட்டது