பக்கம்:மணி பல்லவம் 5.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

798

மணிபல்லவம்

உலகப் படைப்பையும் படைத்தவனையுமே அவமானப்படுத்துவதாக எண்ணி வேதனைப்படுவது அவன் வழக்கம். பழைய நாட்களில் தனக்கு முன் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தால் சிறு குழந்தையின் துன்பத்தைப் போல் சொல்லிலும் உணர்வுகளிலும் வெளிப்படுத்திக் குமுறியிருப்பான். மனம் முதிர்ந்து பக்குவப்பட்டுவிட்டது என்பதற்கு ஒரே பயன் கணந்தோறும் கண்களுக்கு முன் தென்படுகிற உலகத்துத் துன்பங்களுக்காக இதயத்திலேயே அழுது புலம்புவதுதான். எப்போதும் விடலைப் பருவத்துப் பிள்ளையைப் போல் மனத்தினால் குமுறிக் கண்களால் எதிர்க்க முடிவதில்லை. ஆனால் கண்களால் அழுகிறவர்களைத்தான் உலகம் துக்கம் உடையவர்களாகப் புரிந்து கொள்கிறது. மனத்தினால் அழுதுகொண்டிருப்பவர்களைப் புரிந்துகொள்ள உலகத்திற்கு நீண்ட காலமாகிறது. இப்படி ஒவ்வொரு கணமும் ஒவ்வோர் இடத்திலும் கண்முன் தெரியும் உலகத்துத் துன்பங்களுக்காக மனத்தினால் அழுது தனக்கே அந்தத் துன்பம் வந்தாற்போல் முடிவு தேடித் தவிக்கும் பரந்த சோக அநுபவத்தை இளங்குமரன் பலமுறைகள் அடைந்திருக்கிறான்.

நாளங்காடிப் பூத சதுக்கத்தில் முதல் முதலாக இதே ஏழை ஒவியனைச் சந்தித்தபோது இவனுக்கு இரங்க வேண்டும் என்று தன் மனம் நெகிழ்ந்ததை இந்தக் கணத்தில் நினைக்கத் தோன்றியது இளங்குமரனுக்கு. இலஞ்சி மன்றத்துப் பொய்கைக் கரையிலும், உலக அறவியின் நிழலிலும் நிறைந்து கிடந்து உழலும் ஏழைகளையும் நோயாளிகளையும் பார்க்க நேரிடும்போதும் நினைக்க நேரும்போதும் மனத்தினால் அழுது வருந்தியிருக்கிறான் அவன். இந்திர விழா நிறைவு நாளில் கழார்ப் பெருந்துறை நீராடலின்போது சுரமஞ்சரியைக்காப்பாற்றிக் கப்பல் கரப்புத் தீவில் அவளிடம் கருணை கொண்ட போதும், திருநாங்கூரில் குருகுலவாசம் செய்து கொண்டிருந்த போது தன்னுடைய பிறந்தநாள் மங்கலத்துக்காக அழைத்துச் செல்வதற்கு வந்திருந்த முல்லையிடம் மனம் நெகிழ்ந்து பேச முடியாமற் போனபோதும், ‘உங்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/16&oldid=1231758" இலிருந்து மீள்விக்கப்பட்டது