பக்கம்:மணி பல்லவம் 5.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

945

இளங்குமரன் சுரமஞ்சரியோடு அந்தக் கப்பலில் ஏறிய போது பூம்புகார் நகரின்மேல் அந்திமாலை சூழ்ந்து கவிந்து கொண்டிருந்தது. நகர வீதிகளின் மாடங்களில் எல்லாம் அந்தி விளக்குகள் மின்னத் தொடங்கியிருந்தன.

“இந்த நகரத்தையும் இதன் உறவுகளையும் விட்டுப் பிரிவதனால் உன் மனம் எந்த விதத்திலும் கலங்க வில்லையா, சுரமஞ்சரி?”

“நான் அடைந்திருப்பது பெரிதாக இருக்கும்போது இழந்ததை எண்ணி வருந்த முடியாது.”

“இழந்ததை எண்ணி வருந்தத்தான் வேறு ஒருத்தி இருக்கிறாளே” என்று கூறியபடி இளங்குமரன் சுரமஞ்சரியைச் சோதனை செய்யும் குறிப்போடு அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்தான். அவளுடைய கண்களில் கலக்கம் தெரிந்தது. அதே கலக்கத்தை அப்போது தன் கண்களுக்கு முன் அங்கே இல்லாத இன்னொரு முகத்திலும் கற்பனை செய்து பார்த்தான் அவன். அந்தக் கற்பனையே வேதனை அளிப்பதாயிருந்தது.

கப்பல் நகர்ந்தது. கரை மெல்ல மெல்ல விலகியது. விசாகையின் வார்த்தைகளை நினைத்துக் கொண்டான் அவன். எவ்வளவு பொருத்தமான வார்த்தைகள் அவை !

‘முறையாகச் சுற்றி நிலைதிரும்புகிற தேர்போல் உங்கள் வாழ்க்கை அங்கே போய் நிறைகிறது’.

அப்போது சுரமஞ்சரி மெல்லிய குரலில் அவனைக் கேட்டாள்:

“நம்முடைய பயணம் எப்போது முடியும்? என்றைக்கு நாம் கரை சேருவோம்?”

“எந்தப் பயணத்தைப் பற்றிக் கேட்கிறாய் சுரமஞ்சரி? நம்முடைய இந்தப் பயணம் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும். அதற்கு அப்புறம்தான் நம்முடைய சொந்தப் பயணம் தொடங்குகிறது. அந்தப் பயணத்திலிருந்து நாம்

ம-80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/163&oldid=1231893" இலிருந்து மீள்விக்கப்பட்டது